எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் பொறுப்பு பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இயலும் ஸ்ரீலங்கா என்ற உடன்படிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள் உட்பட 34 தரப்புகள் கைச்சாத்திட்டன.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முன்வரும் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய தரப்புகளை ஒருங்கிணைக்கும் மற்றும் அவர்களுடன் பேச்சுகளை தினேஸ் குணவர்தன முன்னெடுத்து வருகிறார்.
ரணில் விக்ரமசிங்க நடத்தும் முக்கிய மற்றும் ரகசிய சந்திப்புகளில் தினேஸ் குணவர்தனவும் பங்குபற்றி வருவதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.