ஆசியாவிலும் இந்து சமுத்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை கொண்டுள்ளதால் பூகோள அரசியலில் வல்லரசு நாடுகளின் கடுமையான இராஜதந்திர நகர்வுகள் இடம்பெறும் நாடாக இலங்கை தீவு மாறியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடைபெறுவது இந்நாட்டுக்கான வெறும் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரம் அல்ல. மாறாக பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகும் வல்லரசை தீர்மானிக்கும் தேர்தலென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
Navy coast guard station இன் நோக்கம் என்ன?
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் இராஜதந்திர நகர்வுகள் இம்முறை கடந்த காலங்களைவிட அதிகமாக உள்ளன.
“அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்வாக்கை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது உள்ளது. அதனால் இலங்கைத் தீவின் அரசியல் நகர்வுகளை அமெரிக்கா கடுமையாக கண்காணித்து வருகிறது.” என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தனியார் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில் தமது செல்வாக்கை அதிகரிக்கும் பல்வேறு முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன் அண்மைய சில சந்திப்புகளின் பிரகாரம் கிரிந்த பகுதியில் navy coast guard station (கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையம்) அமெரிக்காவின் நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக போதைப்பொருள் உட்பட பல்வேறு சட்டவிரோத கடற் பயணங்களை அவதானிப்பதற்காக அமைக்கப்பட்டாலும் அதன் நோக்கம் போக்குவரத்து கப்பல்களை கண்காணிப்பதாகும் என இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவிக்கிறார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் சில கூட்டு நகர்வுகள்
கடந்த 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை அமெரிக்கா, இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகள் இணைந்து கூட்டு படை பயிற்சியொன்றில் ஈடுபட்டன. இந்த பயிற்சிகளை பார்வையிட தூதுவர் ஜூலி சங், பிரசன்னமாகியிருந்தார் என்பதுடன், அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரும் வருகைதந்திருந்தார்.
2021ஆம் ஆண்டின் பின்தான் இவ்வாறானதொரு பயற்சி இலங்கையில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் தொடர்ந்து இத்தகைய பயற்சிகளை நடத்துவதும் navy coast guard station களை இலங்கைத் தீவின் முக்கிய கடற்பரப்புகளில் அமைப்பதும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
இலங்கை தீவிலும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்த இந்தியா மற்றும் அமெரிக்காவின் சில கூட்டு நகர்வுகள் இடம்பெறுகின்றன. அதனால் இலங்கையின் பூகோள அமைவிடம் இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.
அரசியல் ரீதியாக இந்தியாவும் இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவும் இலங்கையில் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருப்பதால் சீனாவையும் காட்டில் தமது இராஜதந்திர நகர்வுகளை இந்த இருநாடுகளும் இலங்கையில் மேற்கொண்டுள்ளன.
இந்திய “றோ“ வின் நோக்கம்
குறிப்பாக இந்திய “றோ“ வின் நகர்வுகள் இந்தியாவுக்குச் சாதகமான ஆட்சியாளர் ஒருவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதாக உள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் உட்பட இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளில் இடம்பெற்றுவரும் ஆட்சி மாற்றங்கள் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் கடுமையான அச்சுறுத்தலாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்திலும் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான மனநிலைகளை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவதாக கூறப்படும் பின்புலத்தில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் என்பது இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்திய “றோ“ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆட்சிக்கு கொண்டுவரும் நகர்வில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் நிலாம்டீன் அண்மையில் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அதன் காரணமாகவே இலங்கையில் நடைபெறுவது வெறும் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்ல இது சர்வதேச நாடுகளின் போட்டிக்களம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.