தமிழ் வேட்பாளர் என்பது வாக்கைப் பிரிக்கும் செயற்பாடே: சாணக்கியன் குற்றச்சாட்டு

0
27
Article Top Ad

தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னாபின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம் எனவும் இம்முறை தமிழ் மக்களுடைய வாக்குகளுக்கே கூடிய பெறுமதி காணப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் இலங்கை தமிழரசு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும், இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும், இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள், எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ஷ களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே ஜனாதிபதியிடம் காணப்பட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் இது வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் இரா.சாணக்கியன் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.