ஜனாதிபதி யார்? மாற்றுக் கொள்கை மையத்தின் ஆய்வு: எவரையும் விரும்பாத மக்கள் வீதம் அதிகரிப்பு

0
9
Article Top Ad

இலங்கைத்தீவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.

பல கருத்துக் கணிப்புகள், எதிர்வுகூறும் ஆய்வுகள் வெளியாகி வெற்றி பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கை மையம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“உங்கள் குடும்பத்தின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்ய யார் மிகவும் பொருத்தமானவர்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ” என்பதை மையப்படுத்தி இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரையும் கருத்திற்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 28.8 வீதமான மக்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ளனர்.

24.3 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை தேர்ந்தெடுத்துள்ளதுடன் 19.3 வீதமான மக்கள் சஜித் பிரேமதாசவை மிகவும் பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை 15.5 வீதமான மக்கள் தெரிவு செய்துள்ள நிலையில் 12.1 வீதமான மக்கள் யாரை தெரிவு செய்வது என்பது தெரியாது என பதிலளித்துள்ளனர்.

இதேவேளை, சகோதர மொழி மக்களிடையே 24.1 வீதமானவர்கள் ரணில் எனவும் 33.1 வீதமானவர்கள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ளனர்.

மலையகத் தமிழர்கள் 35.7 வீதமானோர் சஜித் பிரேமதாசவை தெரிவு செய்துள்ளதுடன், 23.2 வீதமானவர்கள் ஒருவரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

முஸ்லிம் மக்களிடையே 29 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவை தெரிவு செய்துள்ளதுடன் 25 வீதமானவர்கள் தெரியாது என கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ், தமிழ் மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.