அனுரகுமாரவை சந்தித்த அஜித் தோவல்: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

0
13
Article Top Ad

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று வியாழக்கிழமை இலங்கை வந்திருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இலங்கையின் சமகால பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் தரப்புகளை சந்தித்திருந்த அஜித் தோவல் தமிழ் மக்கள் நன்றாக ஆலோசித்து தமது தீர்மானத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவையும் அஜித் தோவல் சந்தித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது.

இன்னும் 22 நாட்களில் இலங்கைத் தீவு ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்கொள்ள உள்ள நிலையில் டில்லியின் செய்திகளுடன் இலங்கை வந்துள்ள அஜித் தோவல், அரச தரப்பினரை மாத்திரமே சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் தமிழ் தரப்பினர் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு உள்ள வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் அனுரகுமாரவையும் சந்தித்துள்ளமை குறித்து இராஜதந்திர மட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்ட அனுரகுமாரவிடம் இந்தியா எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கலந்துரையாடியிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் வெற்றி வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் அனுரவை இந்திய தரப்பு சந்தித்தன் ஊடாக எவர் வெற்றிபெற்றாலும் இணைந்து செயல்பட தயார் என்ற மறைமுக செய்தியையே சர்வதேசத்துக்கு இந்தியா வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.