யாழ்ப்பாணத்தில், ஜே.வி.பியின் ஜனாதிபதி தேர்தல் உரை: அனுரவின் கருத்துக்கு எழும் எதிர்ப்புகள்

0
31
Article Top Ad

தென்னிலங்கையில் மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். அதனால் அந்த வெற்றியின் பங்காளர்களாக தமிழர்களும் மாற வேண்டும். மாற்றத்தின் பங்காளர்களாக மாறாது வரலாற்று தவறை செய்துவிட வேண்டாம் என ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை. அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு 13 ஐ காட்டி வாக்குகளைப் பெறும் முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். நான் தமிழ் மக்களிடம் 13 ஐ தருகிறேன் என வியாபாரத்தை கூற மாட்டேன்.

ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்து வேன். நாட்டில் நீண்ட காலமாக புரையோடி உள்ள லஞ்சம், ஊழல்வாதிகளை அப்புறப்படுத்தி, புதிய இலங்கையை உருவாக்குவதே எனது இலக்கு.

அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர். நாட்டு மக்கள் எம்முடன் திரண்டுள்ள நிலையில் சுமந்திரன் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார்.

சஜித் பிரேமதாஸ 13 ஐ தரப்போகிறாரா அல்லது 13 பிளஸ் தரப் போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் நாட்டை கொள்ளை அடிக்கவில்லை. நாட்டு மக்களைக் கடனாளியாக்கவில்லை.

வடக்கு மக்களும் மாற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்

நாட்டைக் கொள்ளையடித் தவர்களும் நாட்டைக் கடனாளியாக் கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர்.

இது ஏன் கூறுகிறேன் என்றால் ராஜபக்ஷக்கள் நாட்டைக் கொள்ளை அடித்து விட்டார்கள் எனக் கூறிய ரணில் தரப்பினரில் சிலர் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ பக்கம் உள்ளனர்.

அதேபோல பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதி பதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ராஜ பக்ஷ குடும்பத்தின் ஊழல், மோசடி களை மூடி மறப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருடன் ஊழல் மோசடிகளை தடுப்போம் என கூறி வந்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்ஷவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் நாமல், சஜித், ரணில் அணிகள் நாட்டைத் திருடிய – நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற – நபர்களை உள்ளடக்கிய கூட்டமே. பகுதி பகுதியாக மூவர் பக்கமும் அவர்கள் பிரிந்து நிற்கின்றனர்.

இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

ஆகவே, தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். தென்னிலங்கையில் மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர்.

அதனால் அந்த வெற்றியின் பங்காளர்களாக தமிழர்களும் மாற வேண்டும். மாற்றத்தின் பங்காளர்களாக மாறாது வரலாற்று தவறை செய்துவிட வேண்டாம். வடக்கு மக்களும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்கத் தயாராக வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.

எழும் எதிர்ப்பு

அனுரகுமார திஸாநாயக்கவின் இந்தக் கருத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களை மிரட்டி வாக்குகளை பெறும் நோக்கில் இவரது கருத்துகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதுடன், இத்தகைய கருத்துகள் கண்டிக்கத்தக்கது என்றும் கூறுகின்றனர்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை. அவர்கள் விரும்பு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர். கடந்த தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஆகவே, தமிழ் மக்களை மிரட்டும் வகையில் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றவாளிகளை நீதிமன்றங்களே தண்டிக்கும்

இதேவேளை, யாழில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்த அனுரகுமார திஸாநாயக்க,

“போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அனுரகுமார அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில், ‘போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும்“’ என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தச் செவ்வியை மேற்கொள்காட்டி, ‘இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?’ என்று ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, “இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்.” – என்று அனுரகுமார பதிலளித்துள்ளார்.