கொழும்புத் துறைமுக புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறைவு

0
30
Article Top Ad

இலங்கையில் இரண்டு வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெகுஜன புதைகுழியான கொழும்பு துறைமுக புதைகுழியில் முதற்கட்ட அகழ்வு பணிகள் எட்டு நாட்களுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டபோது குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 5ஆம் திகதி வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு வெகுஜன புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது குறைந்தது மேலும் நான்கு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

தலைநகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள கொழும்பு துறைமுக பழைய செயலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு மனித எலும்புக்கூடுகளில் ஒன்றின் மண்டை ஓட்டை கண்டுபிடிக்காத நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி அழ்வினை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகழ்வு நாட்களில் மீட்கப்பட்ட சிறிய எலும்புத் துண்டுகள் தற்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த பாரிய புதைகுழி தொடர்பான விசாரணைகள் விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியின் நிர்மாணிப் பணிகளுக்காக பூமியைத் தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் நீதிபதி பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஜூலை 15, 2024 அன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டபோது 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட நிபுணர் அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொண்ணூறுகளில் முறைசாரா முறையில் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.