தேர்தல் அன்று என்னவெல்லாம் செய்யக்கூடாது?

0
29
Article Top Ad

வாக்கெடுப்புக்கு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்து வருதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை கொண்டு வருதல், மது அருந்திவிட்டு வருதல் போன்ற விடயங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாக்கு சீட்டுகளை புகைப்படம் எடுத்தலும், அவற்றை காட்சிப்படுத்துதலும், தாம் வாக்களித்த வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை கூட்டாக அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைய பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ,

தேர்தல் முடிவுகள் எப்போதும் உத்தியோகபூர்வமான ஊடகங்களில் சரியான தகவல்களோடு வெளியிடப்படும். மாறாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் தகவல்களை பகிர வேண்டாம் என குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.