ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவே வெற்றிபெற்றுள்ளார்.
பெலியத்த, முல்கிரிகல, தங்காலை மற்றும் திஸ்ஸமஹாராக ஆகிய நான்கு தொகுதிகளிலும் அநுர முதலிடம் பிடித்துள்ளார். ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நாமல் ராஜபக்ச நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 505 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 6 ஆயிரத்து 443 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
அநுரகுமார திஸாநாயக்க 2 லட்சத்து 21 ஆயிரத்து 913 வாக்குகளையும், சஜித் பிரேமதாச ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 503 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 33 ஆயிரத்து 217 வாக்குகளையும், நாமல் ராஜபக்ச 26 ஆயிரத்து 707 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பெலியத்த தேர்தல் தொகுதியில் இருந்தே நாமல் ராஜபக்சவின் பாட்டானாரான டீ.ஏ. ராஜபக்ச, தந்தையான மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். அத்தொகுதியிலும் நாமல் நான்காவது இடத்தையே பிடித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பிலும் அநுரவே முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்தே சஜித்தின் அரசியல் பயணம் இடம்பெற்றது. அவருக்கும் அம்பாந்தோடை மாவட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷ வம்சத்திற்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ மொத்தமாக 69 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகியிருந்தார்.
இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 சதவீதமாகும். ஆனால் இம்முறை ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ ஒட்டுமொத்தமாக பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஆகும் .
இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் வெறுமனே 2.57 சதவீதம் மாத்திரமே . கடந்த ஐந்து வருட கால இடைவெளியில் ராஜபக்க தரப்பினர் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது