லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தனது டெலிகிராம் பதிவில் ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளைக் குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
மறுபுறம், நஸ்ரல்லா மரணத்திற்காக, இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சூளுரைத்துள்ளார். நஸ்ரல்லா மறைவை முன்னிட்டு இரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி காமனெயி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. காமனெயி ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டதாக 2 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா மரணத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஹெஸ்பொலாவுடன் இரான் ஆலோசித்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்திற்கு இரான் அழைப்பு
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு விடுத்துள்ளது. அதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களுக்கும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் அமீர் இரவானி கடிதம் எழுதியுள்ளார்.
ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹெஸ்பொலா
ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது. அதுகுறித்த அதன் நீண்ட டெலிகிராம் பதிவில், இஸ்ரேலுக்கு எதிரான சண்டையைத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளது.
அவர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்களின்போது இறந்துவிட்டார் என்று ஹெஸ்பொலா தனது டெலிகிராம் பதிவில் உறுதி செய்துள்ளது. “தெற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த தாக்குதலில்” அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான அதன் சண்டையைத் தொடரப் போவதாகவும் ஹெஸ்பொலா “உறுதிமொழி அளித்துள்ளது” மற்றும் “காஸா, பாலத்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், லெபனான் மற்றும் அதன் உறுதியான, மரியாதைக்குரிய மக்களைப் பாதுகாப்பதாகவும்” உறுதியளித்துள்ளது.
ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.
ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.