சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது.
இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
“திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.