ஈரானின் தாக்குதலை “கண்டிக்கத் தவறியமைக்காக” ஐ.நா பொதுச் செயலாளருக்கு இஸ்ரேல் தடை!

0
24
Article Top Ad

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் “வெளிப்படையாக கண்டிக்க” தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருவதை நேற்று (அக்டோபர் 1) கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது.

இதற்கிடையே, ஈரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் ஈரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

”அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

நேற்று (அக்டோபர் 1) இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய இரானின் அதி உயர் தலைவரான காமேனெயி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக இரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆலோசனை நடத்திய இஸ்ரேல் பிரதமர்

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (அக்டோபர் 2) டெல் அவிவில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் பிற பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று (அக்டோபர் 1) ஈரான் நடத்திய தாக்குதல் ‘பெரும் தவறு’ என்று குறிப்பிட்ட பிரதமர் நெதன்யாகு, இரானுக்கு தக்க பதிலடி கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

நேற்று (அக்டோபர் 1) ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலின் விமானங்கள், டிரோன்கள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகள் என எதுவும் சேதம் அடையவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இந்தத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் மட்டுமே காயமடைந்துள்ளனர், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடந்தது.

அதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “மத்திய கிழக்கில் பற்றி எரியும் தீ கைமீறிச் செல்கிறது,” என்று அப்பகுதியில் நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து கூறினார்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ‘மிகவும் கடுமையானது’ என்று விவரிக்கும் அவர், தற்காலிகப் போர்நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற அவரது முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்து மேலும் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறுகிறார்.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறுகிறார். தாக்குதல்களை அவர் இன்னும் கண்டிக்கவில்லை என்று கூறி இஸ்ரேலுக்குள் நுழைய இதற்கு முன் இஸ்ரேல் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்