தோனியின் ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை முடிகின்றதா?: சென்னை அணியின் தலைமை அதிகாரி வெளியிட்ட தகவல்

0
31
Article Top Ad

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடருக்கான தக்கவைப்பு விதிகளை இந்திய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (சிஎஸ்கே) மிகவும் முக்கியமானது.

புதிய விதிகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடாத எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ‘அன்கேப்’ ஆகக் கருதப்படுவார்.

மேலும் அந்த குறிப்பிட்ட வீரரைத் தக்கவைத்துக்கொள்ள செலுத்த வேண்டிய பணத்தின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனிக்கும் பொருந்தும், இதன்படி, சென்னை அணி நான்கு கோடி ரூபாவிற்கு தோனியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், தோனியின் ஐபிஎல் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

“இந்த கட்டத்தில் எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. நாங்கள் தோனியுடன் கலந்துரையாடவில்லை என்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க தாமதமாகிறது.

தோனி அமெரிக்காவில் இருந்தார், நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நான் இந்த வாரம் பயணம் செய்கிறேன், எனவே வரும் வாரத்தில் சில கலந்துரையாடல்கள் நடக்க வாய்ப்புள்ளது.

அதனால் ஒரு தெளிவு இருக்கலாம். அவர் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அது தோனியின் முடிவாகத்தான் இருக்கும்” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஜூலை 2019 இல் விளையாடினார்.

அவர் 2019 உலகக் கிண்ண தொடரில் அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக கடைசியாக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.