இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக பொது வெளியில் தோன்றிய ஈரான் தலைவர்- முஸ்லிம் நாடுகளிடம் என்ன சொன்னார்?

0
21
Article Top Ad

ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இரானின் ‘எதிரிகள்’இ இஸ்லாமிய உலகில் பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டிய அவர் அதற்கு கண்டனம் தெரிவித்தார். கூடவே இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் அவர் நியாயப்படுத்தினார்.

அயத்துல்லா இந்த உரையை ஆற்றிய போது மொசல்லா மசூதியில் அவரது பேச்சைக் கேட்பதற்காக பெரும் கூட்டம் கூடியிருந்தது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை நினைவு கூர்ந்து காமனெயி தனது உரையைத் தொடங்கினார்.

முன்னதாக 2020-ஆம் ஆண்டில் இரான் புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) ஜெனரல் காசிம் சுலேமானியை அமெரிக்கா கொன்றபோது அயதுல்லா அலி காமனெயி வெள்ளிக்கிழமை தொழுகையில் உரையாற்றினார்.

அதற்கு முன் 2012-ஆம் ஆண்டிலும் காமனெயி இதே போல உரையாற்றியுள்ளார்.

நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பதிலடியாக இரான் செவ்வாய் இரவு இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இதையடுத்து, இரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாலத்தீன நிர்வாகம் மற்றும் லெபனான் உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளின் எதிரிகள், இரானுக்கும் எதிரிகள் என்று காமனெயி தனது உரையில் கூறினார்.

தேவைப்பட்டால் முன்பு போலவே தாக்குதல் நடத்தப்படும்

”எங்கள் ராணுவத்தின் இந்த அற்புதமான பணி முற்றிலும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒன்று. அது நியாயமானதும் கூட,” என்று காமனெயி தனது உரையில் குறிப்பிட்டார்.

”ஆக்கிரமிப்பு கொள்கையைப் பின்பற்றும் சியோனிச ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் குற்றங்களுக்கு நமது ஆயுதப் படைகள் அளித்தது குறைந்த பட்ச தண்டனைதான்,” என்றார் அவர்.

இந்த விஷயத்தில் இரான் தனது கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார். ”இந்தப் பணியை முழு பலத்துடனும் பொறுமையுடனும் செய்து முடிப்போம். இந்தப் பணியை முடிப்பதில் நாங்கள் தாமதிக்க மாட்டோம், அவசரமும் படமாட்டோம்,” என்றார் அவர்.

”தேவைப்பட்டால், அரசியல் மற்றும் ராணுவ விஷயங்களில் முடிவெடுப்பவர்களின் தீர்மானத்தின்படி முன்பு எடுக்கப்பட்ட அதே நியாயமான முடிவு எடுக்கப்படும்” என்றார் காமனெயி.

காமனெயி உரைக்கு முன்பாக நஸ்ரல்லாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்திய காமனெயி, “நஸ்ரல்லா எனது சகோதரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகவும், என்னுடைய பெருமையாகவும் இருந்தார். இஸ்லாமிய உலகிற்கு பிடித்த நபராக அவர் இருந்தார். அவர் லெபனானின் ஒளிரும் வைரமாக இருந்தார்,” என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய தாக்குதலில் நஸ்ரல்லா இறந்ததைத் தொடர்ந்து காமனெயி இரானில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில ஊடக செய்திகள் தெரிவித்தன.

காமனெயி என்ன செய்தியை தெரிவிக்க முயன்றார்?

பிபிசி செய்தியாளர்கள் ஷாயென் சர்தாரிஸ்தே மற்றும் குன்ஷே ஹபிபியாசாத் ஆகியோரின் பகுப்பாய்வு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரல் காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு அயதுல்லா அலி காமனெயி ஆற்றிய உரையைப் போலவே தற்போதைய உரையும் கருதப்படுகிறது.

அமெரிக்கத் தாக்குதலில் ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார்.

தெஹ்ரானின் மையத்தில் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் ஆற்றிய இந்த உரையின் மூலம் காமனெயி, இரானின் வலிமையை உலகிற்குக் காட்டியதுடன், தனது நாட்டு மக்களை சமாதானப்படுத்தவும் முயன்றார்.

உண்மையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து காமனெயி தனது உயிருக்கு பயப்படுவதாக வெளியான செய்திகளை மறுக்கும் முயற்சியாக அவர் ஒரு பொது மேடையில் தோன்றினார்.

ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சி என்றும் இதைக்கூறலாம். இந்த உரையின்போது இரானின் புதிய அதிபர் மசூத் பெஜேஷ்கியன் மற்றும் அரசின் முக்கிய தலைவர்களும் அங்கு இருந்தனர்.

இரானும் இஸ்ரேலும் தங்கள் பகையை ஏதோ ஒரு இடத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மசூத் பெஜேஷ்கியன் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த கருத்து காரணமாக அவர் அடிப்படைவாதிகளின் விமர்சனத்திற்கு ஆளானார்.

இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக பிராந்தியத்தில் இரானுக்கு இருக்கும் ஆதரவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தையும் காமனெயி நிராகரித்தார்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அவர் மீண்டும் ஒருமுறை நியாயப்படுத்தினார்.

ஹனியா மற்றும் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகும் இரான் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்துப் போரிடும் என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு