அணு ஆயுதப் பாவனைக்கு எதிராக போராடும் ஜப்பானிய அமைப்பிற்கு நோபல் சமாதானப்பரிசு

0
40
Article Top Ad

 

2024-ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை  மேற்கொண்டதற்காகவே ஜப்பானிய அமைப்பான  நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து அந்த அமைப்பு பணியாற்றி வந்துள்ளது.  ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை ஜப்பானிய அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் பிராந்திய மோதல்களாக மாறி மூன்றாம் உலகப் போருக்கும் வித்திட்டு விடுமோ என்ற அச்சம் வலுவடைந்து வரும் நிலையில் ஜப்பானிய அமைப்பிற்கான விருது மறைமுகமான செய்தியை எடுத்தியம்புகின்றது.

ஹமாஸ் அரசியல் தலைவரை இஸ்ரேல் தனது நாட்டிற்குள் வைத்து படுகொலை செய்தமை மற்றும் சிரியாவில் உள்ள தூதரகத்தை தாக்கியமை தனது நெருங்கிய சகாவான ஹிஸ்புல்லா இயக்கத்தலைவர் நஸருல்லாவை படுகொலை செய்தமையைத் தொடர்ந்து ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது பெரும் ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதற்கு இஸ்ரேல் விரைவில் பெரும் பதிலடியைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலும் ஈரானுடைய அணு ஆயுதக் கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் பெரும் போருக்கான அபாயம் அதிகரித்துவருகின்றது.

இப்படியாக போர் மூண்டால் அது உலகப்போராக மாறி அணு ஆயுதங்களின் பாவனைக்கு வித்திடலாம் என ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி பெரும் அரசியல், இராணுவ வல்லுநர்கள் மத்தியிலும் கருத்துக்கள் பரிமாறப்படும் நிலையில் அணு ஆயுதங்களின் அபாயத்திற்கு எதிரான செய்தியாக இம்முறை நோபல் சமாதானப்பரிசு அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.