‘ஒன் டைரக்ஷன்’ (One Direction) எனப்படும் பிரபல பாப் இசைக்குழுவை சேர்ந்த பாடகர் லியாம் பேய்ன் (Liam Payne) ப்யூனோஸ் ஏரீஸில்-இல் (Buenos Aires) உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31.
புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று அப்பகுதியில் அவருடைய சடலம் கிடப்பது குறித்த செய்தியறிந்து அங்கு சென்ற அவசர குழுவினர் லியாம் பேய்ன் உடலை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2010-ஆம் ஆண்டு ‘எக்ஸ் ஃபேக்டர்’ (X Factor) எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் லியாம் பேய்ன் உலகப்புகழ் பெற்றார். அவருடன் அக்குழுவில் ஹாரி ஸ்டைல்ஸ், லூயிஸ் டோம்லின்சன், நியல் ஹோரான் மற்றும் ஸைன் மாலிக் ஆகியோரும் பங்கேற்றுப் பிரபலமடைந்தனர்.
இம்மாதத் துவக்கத்தில், ஒன் டைரக்ஷன் இசைக்குழுவில் முன்பு இருந்த நியல் ஹோரானின் இசை நிகழ்ச்சியில் லியாம் பேய்ன் பங்கேற்றார்.
காவல்துறை கூறுவது என்ன?
“மது மற்றும் போதைப்பொருட்களின் தாக்கத்தால் அவர் ஆக்ரோஷத்துடன் இருந்திருக்கலாம்,” என்ற தகவலை அங்கிருந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டதாக, காவல்துறையினர் கூறினர்.
காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றபோது ஹோட்டலின் வளாகத்தில் பெரும் சத்தம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் சடலம் ஒன்றை அவர்கள் கண்டுள்ளனர். அதன் பிறகு, இதுகுறித்த விசாரணையை காவல்துறை தொடங்கியது.
அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவு இயக்குநர் ஆல்பர்டோ கிரெசென்டி, லியாம் பேய்ன் ‘அவரது உடலில் படுகாயங்கள் இருந்ததாகவும்’ பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பால்கனியிலிருந்து பேய்ன் விழுந்ததற்கான காரணங்கள் குறித்த கேள்விகளுக்கு கிரெசென்டி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
‘பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இறந்தது’ தொடர்பாக, அர்ஜெண்டினாவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலதிகத் தகவல்களை வழங்கவில்லை.
இச்சம்பவம் நிகழ்வதற்கு சில மணிநேரம் முன்னதாக, ‘அர்ஜெண்டினாவில் ஓர் இனிமையான நாள்’ என லியாம் பேய்ன் ஸ்நாப்சாட் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
லியாம் பேய்ன் இறப்பு செய்தி வெளியானதையடுத்து, அந்த ஹோட்டலுக்கு முன்பாக அவருடைய ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். இதையடுத்து, அதன் நுழைவுவாயிலை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்தனர். சிலர் மெழுகுவர்த்திகளை ஏந்தி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் இரங்கல்
“நான் என் அறையில் இருந்தேன், அப்போது என்னுடைய சகோதரி லியாம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்” என வயலெட்டா ஆண்டியர் எனும் இளம் ரசிகர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். “எங்களால் அதை நம்ப முடியவில்லை. அதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இங்கே நேரில் வந்தோம்,” என்றார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் லியாம் பேய்னை இசை நிகழ்ச்சியொன்றில் பார்த்ததாக ஆண்டியர் தெரிவித்தார்.
ஸ்பானிஷ் மொழியில் பேசிய ரசிகை ஒருவர், தான் ஹோட்டலுக்கு ஏன் வந்தேன் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். “அவருக்கு பிரியாவிடை கொடுப்பதற்கு ஒரே வழி இதுதான்,” என அவர் கூறினார்.’அமைதியான, பணிவான நபர்’
அவருடைய மறைவுக்கு இணையத்தில் பலரும் தங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்துவருகின்றனர்.
‘தி வாண்டட்’ (The Wanted) எனும் பாப் இசைக்குழுவைச் சேர்ந்த மேக்ஸ் ஜார்ஜ் என்பவர் ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றபோது அவரைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். அவருடைய மறைவு செய்தியறிந்து ‘அதிர்ச்சியடைந்ததாக’ அவர் கூறினார்.
“கடந்த சில ஆண்டுகளாக அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வதற்கான மகிழ்ச்சியான தருணங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்மூலம், அவருடன் பொன்னான நேரத்தைக் கழித்தேன்” என அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.
அவரது சக இசைக்கலைஞர் டார்ம் பார்க்கர் மூளையில் கட்டி காரணமாகப் பாதிக்கப்பட்ட போது, லியாம் அவருக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக ஜார்ஜ் தெரிவித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு தன் 33-வது வயதில் பார்க்கர் இறந்தபோது அவருடைய இறுதிச்சடங்கில் பேய்ன் கலந்துகொண்டார்.
‘ஒன் டைரக்ஷன்’ குழுவுக்கு முன்னதாக, ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றப் பாடகர் ஆலி மர்ஸ் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், ‘வார்த்தைகளை இழந்து நிற்பதாகத்’ தெரிவித்துள்ளார்.
“என்னைப் போன்றே ஒத்த லட்சியங்கள், கனவுகளை லியாம் கொண்டிருந்தார். இந்த இளம் வயதிலேயே அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வந்தது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவருடைய குடும்பம், குறிப்பாக அவருடைய மகன் பேர்-க்கு (Bear) ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளேன்,” என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.’அமைதியான, பணிவான நபர்’
தொலைக்காட்சித் தொகுப்பாளர் டெர்மோட் ஒ’லியரி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியாம் பேய்னுடனான தனது நெருக்கமான தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
“தி எக்ஸ் ஃபேக்டர் நிகழ்ச்சிக்குத் தேர்வுக்காக 14 வயதான லியாம் பேய்ன், அமெரிக்கப் பாடகர் பிராங்க் சினாட்ராவின் பாடல்களைப் பாடி ஆச்சர்யப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது,” என அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
“மகிழ்ச்சியான, எல்லோருக்கும் நேரம் ஒதுக்குகிற, அமைதியான, சிறந்த மற்றும் பணிவான நபராக அவர் எப்போதும் இருந்தார்.”
“அவருடைய குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுக்கும் என்னுடைய அன்பு மற்றும் இரங்கல்களை தெரிவிக்கிறேன்,” என நடிகையும் பாடகியுமான பாரிஸ் ஹில்டன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “நண்பரே, உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.”
சாதித்தது எப்படி?
பிரிட்டனின் வோல்வெர்ஹாம்ப்டனில் பிறந்த லியாம் பேய்ன், ஐடிவி-யின் தி எக்ஸ் ஃபேக்டர் நிகழ்ச்சியில் 2008-ஆம் ஆண்டு பங்கேற்றார். ஆனால், “இரண்டு ஆண்டுகள் கழித்து திருப்பி வருமாறு” நடுவர் சைமன் கோவெல் கூறினார்.
அதேபோன்று, 2010-இல் திரும்பிவந்து நடுவர்களை ஈர்த்தார் லியாம் பேய்ன். மற்ற நான்கு தனிப் போட்டியாளர்களுடன் லியாம் பங்கேற்று, அதன்மூலம் ஒன் டைரக்ஷன் இசைக்குழு உருவானது.
அக்குழு பிரிட்டனின் நான்கு முன்னணி ஆல்பம்களை இதுவரை உருவாக்கியுள்ளது. மேலும், நான்கு தனிப்பாடல்களையும் (singles) உருவாக்கி, உலகளவில் முன்னணி இசைக்குழு வரிசைகளில் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதன்பின், 2015-இல் அக்குழு சிறு இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் ‘ஸ்ட்ரிப் தட் டௌன்’ (Strip That Down) என்ற தனிப்பாடல் மூலம் அறிமுகமானார் லியாம் பேய்ன். அப்பாடல், பிரிட்டனின் அதிகாரப்பூர்வத் தரவரிசை பட்டியலில் (Official UK Chart) மூன்றாம் இடத்தை எட்டியது. ரீட்டா ஓரா எனும் பாடகியுடன், ‘ஃபிஃப்டி ஷேட்ஸ் ஃப்ரீட்’ எனும் (Fifty Shades Freed) இசைப்பதிவில் ‘ஃபார் யூ’ (For You) என்ற பாடல் முதல் 10 இடங்களுக்குள் ஒன்றாக வந்ததுகடந்த 2016-ஆம் ஆண்டு ‘கர்ள்ஸ் அலௌட்’ (Girls Aloud) எனும் பெண்கள் இசைக்குழுவை சேர்ந்த சேரில் ட்வீடியுடன் உறவில் இருந்தார் லியம். அதற்கு அடுத்தாண்டு அந்த இணைக்கு பேர் எனும் மகன் பிறந்தார். லியம் மற்றும் செரில் இருவரும் 2018-ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இந்த வாரத் துவக்கத்தில் அவருடைய முன்னாள் காதலியான மாயா ஹென்றி, லியாம் பேய்ன் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை நிறுத்துமாறும் கூறிச் சட்டபூர்வக் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தன் வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தார்.
லியாம், தன்னைத் தொடர்ந்து தொடர்புகொள்வதாகச் சமூக ஊடகத்தில் குற்றம்சாட்டியிருந்தார் மாயா ஹென்றி. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு லியாம் பதிலளிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.