நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை பெறுவாரா அநுர?

0
30
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றபோது இலங்கையின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியாகவே அவர் திகழ்வார் என அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் பல இடங்களில் மார் தட்டியிருந்தனர்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவி இப்போது வரையில் முக்கிய பல வியடங்களில் அநுரகுமார திஸாநாயக்க அவதானம் செலுத்தி வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த ‘ வளமான நாடு – அழகிய வாழ்வு ‘ விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் மக்கள் அதிக அவதானத்துடனேயே காணப்படுகின்றனர்.

தென்னிலங்கை அரசியல் களம் எப்போதுமே சூடு பிடித்துக் காணப்படும், ஆக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில் அரசியல்வாதிகள் பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையான 113 ஆசனங்கள் கிடைக்குமா என்ற அடிப்படை சந்தேகம் சிலர் மத்தியில் எழுந்துள்ளன.

கல்வியில் சிறந்தவர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் என பலரை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிட முன்னிலைப்படுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தியால் சாதாரண பெரும்பான்மையைப் பெற முடியுமா, என்றால் நிச்சயமாக முடியும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகவும் காணப்பட்டு வருகிறது.

இலங்கை மக்களுக்கு அநுரகுமார திஸாநாயக்கவை தவிர தற்போது வேறு வழியில்லை. ஏனெனில், சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என யார் நியமிக்கப்பட்டாலும் அவர்களிடம் எதுவித திட்டங்களும் இல்லை. இதைத்தான் செய்வோம், இப்படித்தான் செய்வோம் என்ற கருத்து அவர்களிடம் ஒருபோதும் காணப்பட்டதில்லை.

எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறுகிறார். அந்தத் தீர்வுகளுக்கான திட்டங்களையும் முன்வைக்கிறார் ஆகவே, நாட்டு மக்கள் நிச்சயம் அநுர பக்கம் நிற்பது உறுதி, நாடாளுமன்றத்தில் அடிப்படை பெரும்பான்மைய வழங்கப்போவதும் உறுதி என முக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை மீட்டதாகத் தெரிவித்தாலும் கூட உண்மையிலேயே கப்பல் இன்னுமும் நீருக்கு அடியில் சென்றுகொண்டிருந்தது என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர்கிறார்கள்.

விசா பிரச்சினை, ஐஎம்எப் கடன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை என உரைத்து இறுதியில் எதிர்வரும் இளைஞர் சமுதாயத்தின் மீது கடன் சுமை திணிக்கப்பட்டது.

ராஜபக்சக்களின் ஆட்சி காலத்தில் சூறையாடப்பட்ட பொதுமக்கள் செல்வம் பற்றி ரணில் விக்கரமசிங்க எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை எனினும் தற்போது பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான மக்கள் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதால் நாடாளுமன்றில் அடிப்படை பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை நாம் உற்று நோக்கினால் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறான காரணங்களால் தற்கொலை வீதம் அதிகரித்துள்ளது. நாளை என்ன செய்வது என்பது பற்றி சிந்தித்து வாழ்வாதாரத்தை நடத்தி வரும் மக்கள் பார்வையில் அநுரகுமார திஸாநாயக்க தற்போது கதாநாயகனாக பார்க்கப்படுகிறார்.

ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து யாருடைய அரசாங்கம் அமையும் என்பதைப் பொறுத்தே எதனையும் கூற முடியும்.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் அதிகளவு ஆசனங்களைப் பெற்று கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நிலை ஏற்பட்டால் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இருந்து கொண்டு எதனையும் செய்ய முடியாத நிலைமை ஏற்படலாம்.

இருந்தாலும் எதிர்க்கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பற்றி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது கட்சி உறுப்பினர்களும் அறியாதவர்கள் அல்ல.

மக்களும் , பிரதானமாக சிங்கள மக்களும் புதிய மாற்றம் ஒன்றை விரும்பியிருக்கும் பின்னணியில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் போட்டியிடும் உறுப்பினர்களுக்குத் தங்கள் முழு ஆதரவையும் வழங்கக் கூடிய நிலைமைகள் இல்லாமலில்லை.