வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு – சுமந்திரன்

0
3
Article Top Ad

“வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இளைஞர்கள் தற்காலத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். கடந்த தேர்தல் காலங்களில் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். அதற்கான சில முன்னெடுப்புகளை நாங்கள் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற காலத்திலும் செய்திருந்தோம்.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதன்பின்னர் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகப் பாதிப்படைந்திருந்தது.

அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டபாயவோடு நாங்கள் வடக்கு – கிழக்கில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றைக் கையளித்திருந்தோம்.

நாட்டினுடைய ஒரு பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியடைகின்றபோது அதன் பலன் முழுநாட்டையும் சென்றடையும் என்ற விடயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அதன்போது வடக்கு – கிழக்குக்கான அபிவிருத்தி நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பு செய்யப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இடையிலே நாட்டிலே ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியால் வடக்கு – கிழக்குக்கான அபிவிருத்தி நிதியக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் இணைத்து பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டங்களை நடத்தினோம். சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்க வேண்டும் என்று அப்போதைய அரசை வலியுறுத்தி 12 கட்சித் தலைவர்களுடைய கையொப்பத்தோடு ஒரு ஆவணம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தோம்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியம் ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளுடனும் பேசியிருக்கின்றோம்.

அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கு நீண்ட காலம் செல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் விசேட காரணமாக நாடு பாரிய பொருளாதாரம் வீழ்ச்சிக்கு உள்ளானமையும் அதன் பின்னர் ஜனாதிபதிகள் மாற்றமடைந்ததையும் கூறலாம்.

கோட்டபாய அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைப் போல் பின்னர் ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்கவிடமும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியம் தொடர்பான அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தோம்.

தற்போது நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரியவிடமும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியம் பற்றிய விடயங்களைச் சென்ற வாரமும் கலந்துரையாடியுள்ளோம். அது நாட்டினுடைய வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்ற விடயங்களையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம்.” – என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here