இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? செயற்கைக்கோள் படங்கள் காண்பிப்பது உண்மையா?

0
31
Article Top Ad

இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளவாடங்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்களுடன் ஈரான் முன்பு அணுசக்தி திட்டத்திற்கு பயன்படுத்திய இடமும் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும் போது, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கில் சுமார் 30 கி.மீ (18.5 மைல்கள்) தூரத்தில் உள்ள பார்ச்சின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய ஆயுத தளவாட உற்பத்தித் தளம் என்று நிபுணர்கள் அடையாளம் கூறுகின்றனர்.

மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த இடம் ராக்கெட் உற்பத்தியுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கின்றனர்.

செப்டம்பர் 9-ஆம்  திகதி மற்றும் ஒக்டோபர் 27-ஆம்  திகதி எடுக்கப்பட்ட தரம் மிக்க செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, குறைந்தது நான்கு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது தெரிய வருகிறது.

தெலகான்2 என்றழைக்கப்படும் அந்த கட்டடங்களில் ஒன்று, இரானின் அணுசக்தித் திட்டத்தோடு தொடர்புடையதாக சர்வதேச அணு சக்தி அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாகும். அங்கு யுரேனியம் இருந்ததற்கான சாட்சிகளை 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்பு கண்டறிந்தது. தடை செய்யப்பட்ட அணு ஆய்வுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றனவா என்ற சந்தேகத்தை அது கிளப்பியது.

பார்ச்சினின் வடமேற்கில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொஜிர், இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த மற்றொரு இடமாகும்.

“இரானில் பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான கட்டமைப்புகள் அதிகம் கொண்டது கொஜிர்” என்று மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார். 2020-ஆம் ஆண்டில் பெரிய மர்மமான குண்டுவெடிப்பு நடந்த இடமாகவும் இது அறியப்படுகிறது. இந்த இடத்தில் குறைந்தது இரண்டு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன.

டெஹ்ரானின் கிழக்கில் சுமார் 350 கி.மீ தூரத்தில் ஷஹ்ரூத்தில் உள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டிருப்பதும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது. செம்னான் என்ற வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீண்ட தூர ஏவுகணைகளின் பாகங்கள் தயாரிக்கப்படுவதால், இதுவும் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்திருக்கலாம் என்று ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார்.

அதன் அருகில் ஷஹ்ருத் விண்வெளி மையம் அமைந்துள்ளது, அங்கிருந்து தான் 2020-ஆம் ஆண்டு இரான் தனது ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை பல இடங்களில் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் கிடைத்திருக்கும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இதை உறுதி செய்வது கடினம்.

ரேடார் பாதுகாப்பு அமைப்பு என நிபுணர்களால் கண்டறியப்படும் இடம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் காண முடிகிறது.

இலாம் எனும் மேற்கு நகரத்துக்கு அருகில் ஷாஹ் நக்ஜிர் மலைகளில் இந்த இடம் அமைந்துள்ளது. ஜேன்ஸ் எனும் உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் ஜெரமி பின்னி, இது புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று கூறுகிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இடமாக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த இடத்தில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

செய்தி மூலம்: BBC