கடவுச்சீட்டில் சிங்கள், தமிழ் ஏன் பின்லைக்குச் சென்றது?

0
3
Article Top Ad

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது.

இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம்.

இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here