ஹிந்துக்கள் மீது கமலா ஹாரிஸுக்கு அக்கறையில்லை – டிரம்ப் விமர்சனம்

0
15
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்புக்கும் துணை ஜனாதிபதி ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக உள்ளது. இருவரில் யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “அமெரிக்க ஜனாதிபதி, துணை அதிபருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை” என்று விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “பங்களாதேஷில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுவதாகவும், என் மேர்பார்வையில் இப்படி நடந்திருக்க விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கமலாவும், பைடனும் புறக்கணித்துள்ளனர். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் அவர்கள் இருவரும் பேரிடராக அமைந்துவிட்டனர். ஆனால், நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். வலிமை மூலம் அமைதியை திரும்பக் கொண்டு வருவோம்.

இடதுசாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து அமெரிக்க ஹிந்துக்களை பாதுகாப்போம். உங்கள் விடுதலைக்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின்கீழ், இந்தியாவுடனான நமது அளப்பறியா பங்களிப்பையும், எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடனான உறவையும் வலுப்படுத்துவோம்.

உங்கள் சிறு வணிகத்தையெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் கமலா ஹாரிஸ் அழித்துவிடுவார். ஆனால், எனது நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதன்மூலம், வரலாற்றில் மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான தேசமாக்குவோம்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என நம்புகிறேன்.” எனவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.