தேர்தல் முடிந்த கையோடு இந்தியா, சீனா செல்லும் அநுர

0
3
Article Top Ad

பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தேர்தல் முடிந்த கையோடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகிய பின்னர் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட சமகால அரசாங்கத்தின் முக்கிய நபர்களையும் சந்தித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த தரப்புகளையும் அவர் சந்தித்திருந்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்துடன், புதுடில்லிக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பும் விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்ற ஜனாதிபதி, இம்மாத இறுதிக்குள் புதுடில்லி வருவதாக உத்தரவாதம் வழங்கினார்.

அதன் பிரகாரம் பொதுத் தேர்தல் முடிந்து புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி இந்தியாவுக்கு செல்ல உள்ளார். அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பயணத்தில் பிரதமர்  மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்திப்பார் எனத் தெரியவருகிறது.

புதுடில்லிக்கான பயணம் முடிந்தப் பின்னர் இவ்வருட இறுதிக்குள் சீனாவுக்கும் ஜனாதிபதி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அழைப்பை ஏற்கனவே சீனா வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் இந்த இரண்டு பயணங்களும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்துக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here