கூகுள் நிறுவனத்திற்கு அபராத தொகையை விதித்து தீர்ப்பளித்த ரஷ்யா

0
11
Article Top Ad

ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.

அத்துடன், இது சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட மொத்த உலக நாடுகளின் உற்பத்தியை விட அதிகமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அபராதத் தொகையானது உலகின் மிகப்பெரும் செல்வந்த நிறுவனமான கூகுளின் மதிப்பை விட 2 டிரில்லியன் டொலருக்கு அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த அபராதத்துடன், ஒன்பது மாதங்களுக்குள் இந்த ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவும் உள்ளது, அவ்வாறு இணங்கத் தவறும் பட்சத்தில் தண்டனை தினமும் இரட்டிப்பாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கூகுள் நிறுவனம் இந்த தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.