தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தபுதிய சட்டத்திருத்தங்கள்: தேர்தல் முடிந்ததும் முதல் பணி

0
13
Article Top Ad

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பின்னர் முதல் கட்டமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்காக தற்போது பயன்படுத்தப்படும் பிரதானச் சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு அல்லது தடுப்புச் சட்டமாக மறுசீரமைப்புக்கும் பணிகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றன. என்றாலும், குறித்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டமையால் அதன் செயல்பாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், தற்போது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சில அச்சுறுத்தலான சூழ்நிலைகள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான சட்டங்கள் வலுவாக இருப்பதன் ஊடாக அறுகம்பே சம்பவம் போன்று எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை கையாள முடியும் என அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் தேசிய பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், புதிய அரசியலமைப்பொன்றை இரண்டு வருடக் காலப்பகுதிக்குள் அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் அமைச்சரவையில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவைாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் சட்டத்திருத்தங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதுடன், இந்தச் சட்டம் விடுதலைப் புலிகளை கையாள பரவலாக பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி போர் முடிவுக்கு வந்தப் பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எழுந்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறித்த சட்டத்தில் திருத்தங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.