நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலகுவில் சாதாரணப் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்ற தேசிய மட்ட தேர்தல்களால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் பெரிதாகக் கவனம் செலுத்தப்படவில்லை. அப்படி இருந்தும் தேசிய மக்கள் சக்திக்கு 15 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனைப் பின்னடைவு எனக் கூற முடியாது. முதலாம் இடத்தைப் பிடித்த கட்சிக்கும், இரண்டாம் இடத்தைப் பிடித்த கட்சிக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் என்பது தேசிய மட்டத் தேர்தல். மக்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சாதாரண பெரும்பான்மையை இலகுவில் பெறும். தேசிய மக்கள் சக்தியைவிட அக்கட்சியினருக்குப் பின்னால் உள்ள கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, அக்கட்சியினரால் நீண்ட பயணத்தைச் செல்ல முடியும் என நம்புகின்றேன்.
தேசிய மக்கள் சக்தியில் வாக்கு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. கிடைத்துள்ள மாற்றத்தை அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டும்” – என்றார்.