பொது தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ளும். அதனால் நாடாளுமன்றத்தில் எவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக நாம் எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்தை அமைப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ரில்வின் சில்வா மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் அவர்களுடன் பேசவில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவே கூறினர்.
அவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கு ஆதரவு என்று தெரியாது. இந்த நேரத்தில் அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் எங்களுக்கு தேவை கிடையாது. இதன்படி அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
இதேவேளை, அரசாங்கத்தை அமைப்பதற்காக வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றோம். இம்முறை தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். இதனால் பாராளுமன்றத்தில் எவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.” என்றார்.