நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகள் தற்போது முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்ததுபோல அரசியல் களம் சூடுபிடிக்கவில்லை. நாட்டில் பல பகுதிகளில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையும் பிரச்சாரப் பணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் முடியவுள்ள நிலையில் கடந்த முதலாம் திகதி piமுதல் பிரதான கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தன. என்றாலும் காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக பிரச்சாரப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, நுவாரேலியா, கண்டி, மொனராகலை உட்பட பல மாவட்டங்களில் பிரச்சார கூட்டங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
அதனால் மாலைவரை காத்திருக்காமல் காலை வேளையிலேயே கூட்டங்களை முடிப்பதற்கு கட்சியின் தலைமைகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென 75 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேவையேற்படின் இராணுவத்தின் உதவியையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளைமீறி ஒட்டப்பட்டிருந்த மற்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 8 லட்சத்துக்கு மேற்பட்ட போஸ்டர்கள் மற்றும் பெனர்கள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.