அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

0
1
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாகாணத்திலும் வெவ்வேறு விதிமுறைகளின்படி தேர்தல் நேரம் கடைபிடிக்கப்படும் நிலையில், இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிமுதல் ஒவ்வொரு மாகாணமாக வாக்குப்பதிவு தொடங்கி வருகின்றது.

புதன்கிழமை காலை 4.30 மணிமுதல் 11.30 மணிக்குள் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதி யாா் என்பதை முடிவு செய்யும் போா்க்கள மாகாணங்களில் (இரண்டு முக்கிய கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய மாகாணங்கள்) டிரம்ப்புக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது, டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கருத்துக் கணிப்புகளில் இரு வேட்பாளா்களுக்கும் இடையிலான வேறுபாடு போதிய அளவில் இல்லை என்பதால் அவற்றை வைத்து வெற்றியாளரை இப்போதே ஊகிக்க முடியாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.

போா்க்கள மாகாணங்கள் எவை?

பொதுவாக, கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத்தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.

அதே நேரம், இதற்கு நோ்மாறாக நகா்ப்புறமான, பன்முகத்தன்மையைப் போற்றுவோா் நிறைந்த, கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக உள்ளன.

ஆனால், இரண்டுக்கும் பொதுவாக, நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் கலந்து வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிஸோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்தத் தோ்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதனால் இந்த போா்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியை முடிவு செய்பவையாக உள்ளன.

முடிவு எப்போது தெரியும்?

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் வெளியிடும் விதம் மிகவும் சிக்கல் நிறைந்தாக உள்ளது.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணங்களும் வாக்குகளை எண்ணுவதற்கு வெவ்வேறு விதிமுறைகளும் நடைமுறைகளைகளும் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, எல்லா மாகாணங்களிலிருந்தும் தோ்தல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவதில்லை.

பொதுவாக, தோ்தல் முடிந்த சில மணி நேரத்திலேயே முடிவுகள் வெளியாகி அடுத்த ஜனாதிபதி யாா் என்ற விவரம் தெரிந்துவிடும். சில நேரங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ள மறுநாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

தற்போது நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு (இலங்கை நேரப்படி) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடையும். இறுதிக்கட்ட வாக்கெடுப்பு (இலங்கை நேரப்படி) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். அதற்குப் பிறகுதான் தோ்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்ற சூழலைக் கொண்ட போா்க்கள மாகாணங்களில் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் தோ்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வழக்கத்தைவிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here