டிரம்பின் வெற்றியால் மத்திய கிழக்கில் பதற்றம்: ரஷ்யா மகிழ்ச்சி

0
6
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான கமலா ஹாரிசே வெற்றிபெறுவார் எனக் கூறப்பட்டன.

ஆனால், கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதம் நேற்று புதன்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

அமெரிக்கா தலையிட்டாக வேண்டும்

டிரம்பின் வெற்றியானது பல நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன், மத்திய கிழக்கில் போர் சூழல் உக்கிரமடையும் என்றும் இஸ்ரேலின் கரங்கள் மேலும் வலுப்பெறும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் ஆரம்பத்தில் ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டிருந்த டிரம்ப்,

”பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல் இந்த விவகாரம் உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே சண்டைபோட விட்டுவிட வேண்டும்.

ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? ஈரான் 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று. எனவே மத்திய கிழக்கில் அமெரிக்கா தலையிட்டாக வேண்டும்.

பைடன் தவறான புரிதலுடன் இருக்கிறார். அணு சக்தியை பயன்படுத்த வேண்டும் என ஈரான் திட்டமிட்டால் அதனை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தியே தீருவார்கள். அணு சக்தி தானே உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

அதனால், முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதே சரியாக இருக்கும். இதை இஸ்ரேல் முதலில் செய்யட்டும். பின்னர் மற்றதைப் பற்றிக் கவலைப்படலாம்.” என்றார்.

போருக்கு வலுவான தயார்ப்படுத்தல்

இவரது கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், டிரம்ப் வெற்றிபெற்றால் இஸ்ரேலின் கரங்கள் வலுப்பெறும். அதனால் இஸ்லாமிய நாடுகள் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்ற கருத்துகளும் பகிரப்பட்டன.

என்றாலும், ஜனநாயகக் கட்சியின் சர்வதேச கொள்கைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அமெரிக்காவின் மதிப்பை அது இழக்கச் செய்துள்ளதாகவும் டிரம்ப் முன்னெடுத்த பிரச்சாரம் அமெரிக்கர்களை கவர்ந்தது. அதன் வெற்றியையே அவர் நேற்று சுவைத்துள்ளார்.

டிரம்பின் வெற்றி மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளதால் ஈரான் தமது ஆயுதங்களை தயார்படுத்தும் ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் போருக்கு வலுவான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் வெற்றி மறுபுறும் உக்ரைனுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சி போன்று அல்லாது டிரம்ப் மெத்தனமாக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் இந்த போரில், 3ஆம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யாவுடன் அவர் தீவிர பகைமையை விரும்புவதில்லை என பரவலானக் குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா ரகசிய நகர்வுகளை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தியா அமெரிக்க உறவுகள் மீள புதுபிக்கப்படும்

கடந்த வாரம் டிரம்ப் பங்குபற்றிய பொது விவாதமொன்றில் உக்ரைன் போரில் வெல்ல வேண்டும் என விரும்புகிறீர்களா என எழுப்பப்ட்ட கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்காது கடந்து சென்றிருந்தார். இதன் மூலம் அவர் உக்ரைன் போரை விரும்பவில்லை என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

தாம் ஜனாதிபதினால் ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக கடந்த காலத்தில் டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யா, உக்ரைனில் கைப்பற்றிய இடங்களை ரஷ்யாவுக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தத்தின் ஊடாக இந்த போரை டிரம்ப் முடிவுக்கு கொண்டுவருவார் என உக்ரைன் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் இதற்கு முன்வைக்கப்பட்டதுடன், ஜனநாயக கட்சியின் வெற்றியையே உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் விரும்பியிருந்தார்.

டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியானால் அது உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்றும் உக்ரைனிய மக்களும் தெரிவித்திருந்தன. டிம்பின் வெற்றியானது ரஷ்யாவுக்கும், இஸ்ரேலுக்கும் சாதகமான அமையும் என கருதப்படுகிறது.

மறுபுறம் இந்தியாவுடன் கடந்த காலத்தில் டிரம்ப் சுமூகமான உறவையே பேணியிருந்தார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திய மோடியும் டிரம்புக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி அமெரிக்காவில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். இந்தியா அமெரிக்க உறவுகள் மீள புதுபிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சீனா உடனான விரிசல், வடகொரியா – தென்கொரிய விவகாரம் தொடர்பில் டிரம்ப் அதிக கவனத்துடன் செயல்படுவார் என்றும் மற்றும் ஆசிய, ஆப்பிரிக நாடுகளுடான உறவுகளை முதல் தவணையில் அவர் பின்பற்றிய கொள்கைகளின் பிரகாரம் மேற்கொள்வார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here