ஒரு இனத்தின் அடிப்படை அடையாளம் என்பது மொழியாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் 75 வீதமானவர்கள் சிங்களவர்களாவும் எஞ்சியுள்ள 25 வீதம் தமிழ் மொழி பேசும் மக்களாகவும் வாழந்து வருகின்றனர் . இந்த ஒரு விகிதாசார முறையை வைத்தே பெரும்பான்மை சிறுபான்மை என்று பேசப்படுகின்றது. ஆனால் மரபுவழியாக வாழ்ந்து வரும் ஒரு இனம் எண்ணிக்கையில் குறைவடைந்திருந்தாலும் அந்த இனத்தை தேசிய இனம் என்றே அழைக்க வேண்டும். அந்த இனம் பேசுகின்ற மொழியும் தேசிய மற்றும் அரச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவும் வேண்டும்.
1956ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே இலங்கைத்தீவில் சிங்கள – தமிழ் முரண்பாட்டைத் தோற்றுவித்தது எனலாம்.
பன்மைத்துவமாக மக்கள் வாழும் இலங்கையில் இன மேலாதிக்கத்துக்கு வித்திட்ட பல சம்பவங்கள் உண்டு. 1920ஆம் ஆண்டு பிரித்தானியரை எதிர்ப்பதற்காக சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி உருவாக்கப்பட்ட இலங்கைத் தேசிய இயக்கத்தின் தலைவராக சேர் பொன் அருணாச்சலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் ஒரு வருடத்துக்குள்ளேயே சிங்கள தமிழ் முரண்பாடு ஆரம்பித்துவிட்டது. இதனால் இலங்கைத் தேசிய இயக்கத்தில் இருந்து வெளியேறிய அருணாச்சலம் 1921இல் தமிழர் மகா சபை உருவாக்கினார். இதுவே முதன் முறையாக சிங்கள – தமிழ் முரண்பாட்டுக்கு வித்திட்டது எனலாம்.
ஆனாலும் 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டமையே இன மோதலை முதன் முதலில் தோற்றுவித்து. குறிப்பாக 1958ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற வன்முறையில் பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். தற்போது 68 ஆண்டுகளும் பூர்த்தியாகியுள்ளன.
அப்போது இலங்கையில் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்டது.
1956ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பண்டாரநாயக்கா, அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார்.
அன்று முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள மொழி அரச கரும மொழி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ் மொழி சிறுபான்மை என புறக்கணிக்கப்பட்டது.
அதன்மூலம், அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே நாடு முழுவதும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை மேலும் உருவாக்கியது. அத்துடன் கல்வியில் தரப்படுத்தலும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அகிம்சைப் போராட்டங்களும் பின்னர் ஆயுதப் போராட்டமும் மூழ இதுவே வித்திட்டது.
வடகிழக்கு மக்கள் உள்ளிட்ட அதற்கு வெளியே உள்ள தமிழர்கள் மக்களும் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
தனக்கான தேவையையும், கேள்வியையும் பூரணப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் இங்கு நமக்கான ஆட்சி தான் இடம்பெறுகிறதா என்றொரு கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.
இந்த எண்ணம் தான் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவையை உருவாக்கியது. இது மாத்திரமன்றி தமிழீழம் கோரிக்கையும் எழுந்தது. 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனம் தமிழ் ஈழத்தை பறைசாற்றியது.
1958ஆம் ஆண்டு 28ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஒன்றை முன்வைத்து தமிழ் மொழிக்கு சிறிய இடத்தை பண்டாரநாயக்கா வழங்கியிருந்தபோதும் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் பாடசாலைகளில், அரச நிறுவனங்களில் மற்றும் அரசாங்க பரீட்சைகளில் தமிழ்மொழி இணைக்கப்பட்டது. ஆகவே தனிச் சிங்களச் சட்ட உருவாக்கம் இன வன்முறைக்கு வழிசமைத்ததுடன் இன்று வரை அதன் தொடர்ச்சியாக பல்வேறு அகிம்சை வழிப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆயுதப் போராட்டத்தின் பலனாக இலங்கைத்தீவில் மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 13ஆவது திருத்தச்சட்டம் நடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ் அரச கரும மொழியாக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை சிங்கள மொழியே சட்டவாக்க மொழியாக இலங்கையில் இருந்து வருகின்றது.
13ஆம் திருத்தச் சட்டத்தின்படி, தமிழ் மொழியும், சிங்கள மொழியும் ஆட்சி நிர்வாக மொழிகள். எனினும், நாட்டில் சிங்கள மேலாதிக்கம் அதிகளவில் செல்வாக்கு செலுத்துகின்றது. அதனை பல இடங்களில் நாம் உதாரணம் காட்டலாம்.
எவ்வாறாயினும், ஒரு நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்பது மொழி, மதம் என்பதை தாண்டி ஒரு நாடு என்ற அரசியல் நோக்கம் ஆகும்.
பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஆட்சியமைத்த காலங்களில் தீர்க்க முடியாமல் போன இன நெருக்கடி தற்போது அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்திலும் தொடருகின்றது.
சோசலிசம், சமத்துவம் என்று மார்தட்டுகின்ற ஜேவிபியின் மறு உருவமான தேசிய மக்கள் சக்தி இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முழுமையாக மாற்றி தமிழ் முஸ்லிம் மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ளக் கூடிய பன்மைத்துவ அரசாங்க முறையை உருவாக்குமா என்பது கேள்வியே!
ஏனெனில் ”இலங்கை ஒற்றை ஆட்சி” என்ற கட்டமைப்பை மாற்ற எந்தவொரு சிங்களத் தலைவர்களுக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
சமத்துவம் சமவுரிமை என்ற வெற்றுப் பேச்சுகள் அல்லது தமிழர்களின் பிரச்சினையை புரிந்துகொள்ளுகின்றோம் என்ற சமாதானப்படுத்தும் வெற்று வார்த்தைகள் மாத்திரமே விஞ்சியுள்ளன.