மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், நியூயார்க்கில் ஐ.நாவுக்கான ஈரான் தூதரை, ட்ரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநரான எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்துள்ளதாகவும், அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக மகுடம் சூட உள்ளார். இச்சூழலில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் எப்போது வேண்டுமானாலும் முழுவீச்சில் மூளும் என்பதால், சர்வதேச நாடுகளே அச்சத்தில்தான் உள்ளன. இந்த நிலையில், ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்க் ஆகிய இருவரும் நியூயார்க்கில் ரகசியமாக சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்தச் சந்திப்பு நேர்மறையானதாக இருந்ததாகவே சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ட்ரம்புடன் நடந்த தொலைபேசி வாயிலான உரையாடலின் போது மஸ்க்கும் உடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ட்ரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநராக மஸ்க் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் எலான் மஸ்க் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
ஈரானுடனான ட்ரம்பின் உரசல்கள்.. டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தின் போது 2015 ஆம் ஆண்டில் ஈரானுக்கு உலகில் உள்ள மற்ற வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். மேலும், ஈரானுக்கான எண்ணெய் வருவாய் மற்றும் சர்வதேச பணப்பரிவர்த்தனைக்கான தடைகளையும் விதித்தார். அதோடு ஈரானின் உயர்மட்ட ஜெனரல் காசிம் சுலைமானியை 2020 இல் ஈராக்கில் படுகொலை செய்யவும் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ‘டொனால்ட் ட்ரம்ப் உலகின் முதன்மையான தீவிரவாதி’ என்று குறிப்பிட்டு அவரைக் கொல்ல ஈரான் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ட்ரம்ப் முதலில் இருந்தே ஈரானுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். அண்மையில், ட்ரம்ப் மீது கொலை முயற்சிக்கான சதித் திட்டத்தில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த முறை ட்ரம்பின் அணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடகவே மஸ்க் – ஈரான் தூதர் சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ட்ரம்ப், தேர்தல் பிரச்சாரங்களில் மத்திய கிழக்கில் தன்னால் மட்டுமே அமைதியைக் கொண்டு வர முடியும் என்று கூறி வந்தது நினைவுகூரத்தக்கது.
ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்கிடம், ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனங்கள் ஈரானில் வந்து வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க மாட்டோம் என ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதுக்குழு தெரிவித்துள்ளது.