”இனவாதம் மற்றும் மதவாதத்தால் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றி பொய்களை சமூகத்தில் விதைத்தை பிரிந்தாண்டுவந்த ஆட்சியாளர்களின் யுகம் முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டை ஒன்றிணைக்கும் ஜனநாயக பயணத்தை தொடர்வோம். எம்மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ள வடக்கு,கிழக்கு தமிழ், மலையகத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விசேட நன்றியை தெரிவிக்கிறோம்.“
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
”எமக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பாரத்தை நாம் நன்றாக உணர்ந்துள்ளோம். மக்கள் எம்மீது பாரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த நம்பிக்கையை கட்டாயம் நாம் காப்பாற்றியே ஆக வேண்டும்.
இது ஒரு சாதாரண வெற்றியல்ல. எமது நாட்டில் 76 வருடங்களாக தொடர்ந்த அதிகார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள ஆணையாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பழையான மிகலும் பிரபல்யமான கட்சிகளை தோற்கடித்துதான் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். எமது நாட்டின் மக்கள் பழைய யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
வரபிரசாதங்கள், விசேட பாதுகாப்புகளை கொண்டு மக்கள் நிதியில் மோதிய அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொது மக்களின் யுகம் பிறந்துள்ளது. அவர்களது அபிலாசைகளை நோக்கமாக கொண்டதாக இந்த வெற்றி இருக்கிறது.
இத்தகைய பாரியதொரு நம்பிக்கையை எம்மீது மக்கள் வைத்தமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டிய சவால் எம்மிடம் உள்ளது. 159 ஆசனங்களை வழங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியுள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட கூடாதென சமூகமட்டத்தில் கருத்துகள் இருந்தன. நாமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரியிருக்கவில்லை. ஆனால், மூன்றில் இரண்டையும் தாண்டிய ஆணையை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். எமக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய மக்கள் ஆணையை மிகவும் கவனமாக கையாள வேண்டிய தேவை உள்ளது.
1978ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியாளர்களுக்கு கிடைத்த அதிகாரத்தை தவறான பயன்படுத்தி மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபட்டமையின் காரணமாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எந்தவொரு கட்சிக்கும் வழங்க கூடாதென்ற நிலைப்பாட்டில் மக்கள் இருந்தனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் மக்களை அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கி தமது அதிகாரங்களை அதிகரித்து ஒருபோதும் மக்களிடம் தோல்வியடைய மாட்டோம் என்ற சிந்தனையில் சுகபோகங்களை அனுபவிக்கும் மனநிலையிலேயே ஆட்சியாளர்கள் இருந்தனர்.
அதனை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றே நாம் நினைத்தோம். எமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் ஊடாக நாம் போதையாக போவதில்லை. மிகவும் கவனமாக மக்களின் நலன்களுக்கே இந்த அதிகாரத்தை பயன்படுத்த உள்ளோம்.
நாட்டை அபிவிருத்தி செய்யவும், ஜனநாயகத்தை கட்டியெழுப்பவும், ஊழல் – மோசடிகளற்ற ஆட்சியை உருவாக்கவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவுமே மக்கள் ஆணையை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
மட்டக்களப்பை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளது. விசேடமாக வடக்கின் இரண்டு தேர்தல் மாவட்டங்களான வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது. அரசியலில் மாறுபட்டு விளங்கும் ஒரு விடயமாக இதனை நாம் நம்புகிறோம்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை வெற்றிகொண்டுள்ளோம். நீண்டகாலமாக குறிப்பிட்ட சில தரப்பின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மலையக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் நாம் வெற்றிபெற்றுள்ளோம். நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி உட்பட மலையக மக்கள் வாழும் பல பகுதிகளை வெற்றிகொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பகுதி மக்களும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் கைகோர்த்துள்ளனர். நாட்டின் அனைத்து மக்களும் பங்களிப்பை வழங்கியுள்ள இந்த வெற்றியை பாரிய வெற்றியாக கருதுகிறோம். அரச ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 80 வீதத்துக்கும் அதிகமான ஆதரவை வழங்கியுள்ளனர்.
எம்.பிகளை இணைத்து கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து அடைந்த வெற்றியல்ல அது. இந்த வெற்றியில் ஆழமான எதிர்பார்ப்பொன்று உள்ளது. இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம். அந்த அர்ப்பணிப்பில்தான் நாம் புதிய நாட்டை உருவாக்கும் இந்த சந்தர்ப்பத்தை பெற்றுள்ளோம்.
குறிப்பாக வடக்கு மக்கள் வேறு பிரதேச தலைவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். வடக்கு மக்களுக்கு தமது தலைவர் போன்று உணரும் ஒரு தலைவரை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். இனவாதத்தை தூக்கியெறிந்துவிட்டு வடக்கு, மலையகம் மற்றும் தெற்கு மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.
இனவாத தலைவர்கள் பரப்பிய பொய், புரளிகள், மித்தைகள், ஏமாற்றுதல்களை நம்பாதே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல் 56 இலட்சம் வரையிலான வாக்குளை பெற்றோம். ஆனால், பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வரை வாக்குகளை பெற்றுள்ளோம். குறுகிய காலத்துக்குள் 12 இலட்சம் மக்கள் எம்மை நம்பியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் மக்களை இனவாதத்தை பரப்பில் மக்களை அச்சுறுத்தினர்.
நாம் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றனர். பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்றனர். ஆனால், அவர்கள் கூறிய அனைத்தும் பொய்யாக நாம் வெற்றிபெற்றோம். அதனால் மக்கள் எம்மீது நம்பிக்கைவைத்துள்ளனர். பழைய யுகம் முடிவுக்கு வந்துள்ளது.
பொதுத் தேர்தலிலும் வடக்குக்குச் சென்ற எம்மீது இனவாத சேறை பூசி மக்களை ஏமாற்ற பார்த்தனர். தமிழ் அரசியல் வாதிகளும் எமக்கு எதிராக இனவாதக் கருத்துகளை பகிர்ந்து இனவாதத்தை தூண்ட பார்த்தனர். எமது கருத்துகளை திரிவுபடுத்தி தமிழ் மக்கள் மத்தியில் கருத்துகளை பகிர்ந்தனர். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இனக்கு எதிராக மதவாதத்தை பிரயோகிக்க பார்த்தனர்.
இனவாதம் மற்றும் மத அடிப்படைவாதத்துடன் மோதிய யுகம் முடிவுக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்ச தரப்பு சிங்கள இனவாதத்துடனும், ஏனைய தரப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதங்களை தூண்டிதான் அரசியல் செய்தனர். இனவாதத்தை தூண்டி மக்களை பரிந்து ஆண்டவர்களை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியடைந்த நாட்டையும், கடன்களால் மூழ்கியுள்ள மற்றும் சர்வதேசத்திடம் மதிப்பை இழந்துள்ள ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம். நாம் ஒரு சிறந்த நாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. சுத்தமான நாட்டையும், கிராமிய பொருளாதாரத்தை மீட்டு உருவாக்கம் செய்யவும் வேண்டியுள்ளது. சவால்களை வெற்றிக்கொள்ளவே நாம் இந்த மக்கள் ஆணையை பயன்படுத்துவோம். வெற்றியாளர்கள் தோல்வியாளர்கள் என மக்களில் எவரும் இனி இல்லை. ” என்றார்.