குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் மேற்கொண்ட விசாரணையால் மலையக தமிழர்களின் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் குழுவினர் அச்சமடைந்துள்ளனர்.
மக்களுடைய பொழுதுபோக்கிற்காக கலையை வெளிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தமக்கு விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மலையகத்தில் உள்ள தியேட்டர் மேட்ஸ் நாடகக்குழு தெரிவிக்கின்றது.
“தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெறுவது எங்களுக்குத் தலைவலி அல்லவா?. இந்த மாதிரி கலையை வெளிப்படுத்தக்கூட சுதந்திரம் இல்லையா?”
தியேட்டர் மேட்ஸ் நாடகக்குழு, கடந்த வருடம் பொகவந்தலாவை, கொட்டியாகல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ‘லயத்து கோழிகள்’ நாடகத்தை தடுப்பதற்காக இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
தியேட்டர் மேட்ஸ் நாடகக் குழு ‘கோடியோரக் கூடல்’ என்ற தலைப்பில் சிறுவர்களை மையகமாகக் கொண்ட நாடகத்தை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருவதாகவும், நவம்பர் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொகவந்தலாவையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடகம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், தன்னை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி எனக் கூறி, “இங்கே என்ன செய்கிறீர்கள், யார் இதனை ஏற்பாடு செய்தது?” போன்ற கேள்விகளை எழுப்பி, இந்த நாடகம் அரங்கேற்றம் தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த இடத்திற்கு தன்னை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். .
அப்போது நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நாடகத்தைப் பார்க்க முடியும் எனவும், நாடகக்குழுவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏன் பின்தொடர்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“நாம் இங்கு நாடகம் ஒன்றை செய்கிறோம். நீங்களும் இங்கு அமர்ந்து நாடகத்தைப் பார்க்கலாம். சி.ஐ.டியினரையும் வரச்சொல்லுங்கள் அவர்களுக்கும் இந்த நாடகத்தைப் பார்க்கட்டும். எங்கள் பின்னால் சி.ஐ.டியினர் வருவது ஏன்?
நாடகங்கள் தொடர்பில் தேடி கண்டறிவதை விட பொகவந்தலாவையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை செய்ய இன்னும் பல முக்கிய விடயங்கள் உள்ளதாகவும் அதுத் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் நாடகக் குழுவினர், தன்னை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட நபரிடம் கூறிய போது இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு நாடக குழுவினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டு அங்கிருந்து சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகம் நடத்தப்படுவதைத் தடுக்க அரச பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி குறித்து தியேட்டர் மேட்ஸ் நாடகக் குழு முறைப்பாடு அளித்திருந்தது.
ஜூலை 09 ஆம் திகதி மாலை, பொகவந்தலாவை, கொட்டியாகல தோட்டத்தில் அரங்கேற்றப்படவிருந்த ‘லயத்து கோழிகள்’ நாடகத்தை தடுக்க தோட்ட நிர்வாகம், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இணைந்து செயற்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜூலை 26 ஆம் திகதி முறைப்பாடு செய்த, நாடகத்தின் நெறியாளர், எதிர்காலத்தில் இவ்வாறான கலைச் செயற்பாட்டு முயற்சிகளின்போதான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.