அநுரகுமாரவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்புலத்தில் அமெரிக்கா

0
3
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா மிகப்பெரிய இராஜதந்திர சக்தியாக தமது செல்வாக்கை செலுத்தியுள்ளதாக இந்தியாவின் புவிசார் அரசியலில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆய்வாளருமான எஸ்.டி.முனி தெரிவித்துள்ளார்.

பலர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வெளிநாட்டு சக்திகள் இலங்கைத் தீவின் அரசியல் மாற்றத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுடில்லியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”இலங்கையில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றங்களில் அமெரிக்கா பாரிய இராஜதந்திர செல்வாக்கை செலுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் அமெரிக்க இராஜதந்திர வட்டாரம் ஆழமான செல்வாக்கை செலுத்தியுள்ளன.

அநுரகுமார திசாநாயக்க தனது எழுச்சிக்கு அமெரிக்காவிற்கும் கொழும்பில் உள்ள அதன் இராஜதந்திரிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறார். இலங்கையின் அரசியல் பரிணாமத்தின் பின்னணியில் உள்ள சக்தி இயக்கவியலை இந்த செல்வாக்கு எடுத்துக்காட்டுகிறது. பலர் ஒப்புக்கொள்ள விரும்பாவிட்டாலும் வெளிநாட்டு சக்திகள் இலங்கை தீவின் அரசியல் மாற்றங்களில் அதிக செல்வாக்கு செலுத்தியுள்ளன.

அநுரகுமார திசாநாயக்க புரட்சிகர இலட்சியங்களிலிருந்து மேலும் ஜனநாயகக் கண்ணோட்டத்திற்கு படிப்படியாக மாறி வருகிறார். அநுரகுமார திசாநாயக்க இப்போது வித்தியாசமான நபராக மாறிக்கொண்டிருக்கிறார். அவர் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அவர் தனது அனுபவங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் மாற்றத்தின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து ஜே.வி.பி.யின் சித்தாந்தத்தை மறுவடிவமைப்பதில் முக்கிய நபராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே திகழ்ந்தார். ஜே.வி.பியை அதன் வன்முறை மனப்பான்மையிலிருந்து வெளியேற்றி ஜனநாயகத்தை நோக்கி பயிற்றுவித்தவர் சந்திரிகாதான்.

ஜே.வி.பியை அதன் புரட்சிகர வேர்களில் இருந்து விலக்கி மிகவும் நடைமுறை மற்றும் ஜனநாயகப் பாதையை நோக்கி வழிநடத்துவதில் முக்கிய பங்கை சந்திரிகாவே வகித்திருந்தார்.

சாதகமான முன்னேற்றங்கள் உள்ள போதிலும் இலங்கையின் அரசியல் கட்டமைப்பின் எதிர்காலம் நம்பிக்கையை கட்டியெழுப்பும் பாதை தொலைவிலேயே உள்ளது. சிறுபான்மையினரின் கவலைகளை உண்மையாக நிவர்த்தி செய்து அவர்களை தேசத்தின் சமமான மற்றும் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக உணரவைக்கும் புதிய யோசனைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இலங்கைக்கு வந்துவிட்டது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here