சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா எம்.பி: சஜித்தின் ஆசனத்தில் அமர்ந்து வாக்குவாதம்

0
5
Article Top Ad

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், இவர் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முதல் அமர்வில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் நேற்றைய தினம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு ஆசனங்களில் அர்ந்திருந்தனர். ஆளுங்கட்சியின் பதவி நிலைகளுக்கு ஏற்கனவே சிலர் தெரிவுசெய்யப்பட்டிருந்ததால் அவர்கள் உரிய ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னரே சபைக்கு வந்திருந்த யாழ்.மாவட்ட எம்.ாி வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றம் கூடிய பின்னரே தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்படக் கூடியவராக மக்கள் ஆணையை பெற்றவர் உரிய ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த வைத்தியர் அர்ச்சுனாவிடம் அவருக்கு அருகில் இருந்த ரஞ்சித் மத்தும பண்டார உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் ஆசனம். அதனால் வேறு ஆசனத்தில் அமருங்கள் எனக் கூறியுள்ளனர்.

அதற்கு, எதிர்க்கட்சித் தலைவரது ஆசனம் என இதில் எங்காது குறிப்பிடப்பட்டுள்ளதா இன்றைய தினம் எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என அர்ச்சுனா எம்.பி பதிலளித்துள்ளார். அருகில் இருந்த படைக்கள சோவிதர்கள் உடனடியாக குறித்த இடத்துக்கு விரைந்து, இது எதிர்க்கட்சித் தலைவரது ஆசனம், நீங்கள் வேறு இடத்தில் அமருங்கள் எனக் கூறியுள்ளனர். என்றாலும், அதற்கும் அவர் மறுப்பு வெளியிட்டிருந்தார்.

இதனால் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிய போது சபைக்குள் வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அர்ச்சுனா எம்.பி, அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருமைகாமையில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 11.30 மணிக்கு கூடியபோதும் அர்ச்சுனா எம்.பி எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த படைக்கல சேவிதர் அது எதிர்கட்சித்தலைவரின் ஆசனம் என்று கூறியபோதும் அவர்களுடன் முரண்பட்டதுடன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார்.

சபாநாயகரால் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமாச அறிவிக்கப்பட்டும் அர்ச்சுனா எம்.பி அவ்வாறு செயல்பட்டமையை நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணாக செயற்பட்டுவதாக ஏனைய எம்.பிகள் கேலி செய்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே அமர்ந்தார்.

சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்ததுடன், நாமல் ராஜபக்ச ,ரவி கருணாநாயக்க,ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here