பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், முதல் செயல்பாடாக சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்து, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக நாடாளுமன்றம் 10.45 இற்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 11.30 மணிக்கு கூடும்.
முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சம்பிராயப்பூர்வமான வரவேற்பை சபாநாயகர் அளிப்பார் என்பதுடன், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் வரவேற்புடன் நாடாளுமன்ற சபை வளாகத்தின் சபாபீடத்துக்கு ஜனாதிபதி அழைத்து செல்லப்படுவார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தமது கொள்கை விளக்க உரையை ஆரம்பிப்பார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதியை வரவேற்றும் நிகழ்வுகளுக்கு பாரிய அளவில் அரச நிதி செலவு செய்யப்பட்டதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்தன.
என்றாலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைக்காக நாடாளுமன்றம் கூடிய போது, இந்த செலவுகள் ஓரளவு குறைக்கப்பட்டிருந்தன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக செலவுகளை குறைக்கும் வகையில் மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்லுமாறு நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்பிலான அலுவலகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வரவேற்பு வைபமும் மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்தன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என்பதுடன், மீண்டும் கூடுவதற்கான திகதியை ஜனாதிபதி அறிவிப்பார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய ஆதரவை வழங்கியுள்ளதால் ஜனாதிபதி அநுரகுமார திசாயக்கவின் உரையானது இலங்கையில் வாழும் மூவின மக்களது அபிலாசைகளையும் பிரதிபளிக்கும் வகையில் இடம்பெறும் என்றும் அரச தரப்பு செய்திகள் தெரிவித்தன.
இதேவேளை, இலங்கையில் உள்ள இராஜதந்திரிகளும், இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட பல சர்வதேச நாடுகளும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை உற்றுநோக்கியுள்ளன.
அரசாங்கத்தின் முதலாவது கொள்கை விளக்க உரை என்பதால் இந்த உரையில் சமகால அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை இதன் ஊடாக அவதானிக்க இராஜதந்திரகள் எதிர்பார்த்துள்ளனர்.
அணிசேரா கொள்கையை இலங்கை கடைப்பிடிப்பதே பொருத்தமாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் பணியாற்றிய போது அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
அதனால் அவரது சர்வதேச கொள்கைகள் அணிசேராக் கொள்கையாகவே இருக்கும் என்றும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுடன் சுமுகமான உறவையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றும் என்றும் அரச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.