பேச்சு நடத்தத் தயார்- தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார் அழைப்பு

0
2
Article Top Ad

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகளை நாம் பார்க்கின்றபோது, தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அவர்கள் அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்தத் தருணத்தில் அவர்கள் ஏலவே மைத்திரி – ரணில், கூட்டாட்சி அரசில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை. அது ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள ஒன்றாகும். ஆகவே, குறித்த இடைக்கால அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான முடிவுகளுக்கும் செல்ல முடியும். ஆனால், தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்காக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.

குறித்த வரைவு தயாரிக்கப்பட்டபோது சுமந்திரன் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக தொடர்ச்சியாக அவர்களின் பங்கேற்பு முழுமை பெறும் வரையில் நீடித்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், கொள்கை அளவில் அனைவரும் தமிழ் மக்கள் பேரவையின் வரைவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அதனை மையப்படுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் ஏனையவர்கள் அதில் பங்கேற்பதற்குமான பகிரங்க அறிவிப்பை நாம் விடுக்கின்றோம்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here