மாவீரர் நாள் என்பதன் சரியான உள்ளடக்கத்தை அரசு உணர வேண்டும்

0
5
Article Top Ad

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் 36 ஆண்டுகளாக நீடித்த இன நெருக்கடியினால் இலங்கை இராணுவத்துடன் போரிட்டு உயிர் நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் சென்ற 21 ஆம் திகதி வியாழக்கிழமையில் இருந்து அனுட்டிக்கப்படு வருகிறது. நாளை 27ஆம் திகதி அதன் இறுதி நாள்.

ஒரு தேசிய இனத்தின் சுயமரியாதை என்பது சுயநிர்ணய உரிமைக்கு அமைவானது. ஆகவே மாவீரர் நாள் என்பது வெறுமனே போரில் உயிர்நீத்தவர்களை மாத்திரம் நினைவு கூரும் நாள் அல்ல என்பது இங்கு தெளிவாகிறது.

இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களால் மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

2009 இற்குப் பின்னரான சூழலில் இந்த நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஏதோவொரு காரணத்தை மையப்படுத்தித் தடை விதித்திருந்தன.

மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருப்பது வழமை. ஆனால் இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும் மாவீரர் நினைவேந்தல் நாளை அனுஷ்டித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் விளக்கம் கூறி அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது.

சொந்த வீடுகளில், ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டால் கூட கைது செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு. பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்து நொருக்கப்பட்டுமிருந்தன.

இதன் காரணமாக போராளிகளை நினைவுகூரும் விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிரொலித்தது, இராணுவத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்தவர்களை அவர்களது உறவினர்கள், நினைவுகூர வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியது. அதனை தடுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூட அதற்கு தடை விதிக்க வேண்டாம் என பரிந்துரை செய்தது. எனினும் மகிந்த அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச அதனை கடுமையாக மறுத்திருந்தார்.

நினைவுகூர இலங்கை அரசாங்கம் பல தடைகளை விதித்து வந்த காரணத்தினால் தான், இலங்கையில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு உலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தற்போது ஆட்சிபீடம் ஏறியிருக்கும் ஜே.வி.பியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 70 -80 களில் சோசலிச சமத்துவம் என்ற பெயரில் இலங்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. அது ஒரு துயர வரலாறு.

எனினும், இராணுவ மோதலில் உயிர்நீத்த தங்கள் போராளிகளுக்காக அவர்கள் கார்த்திகை தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். ஆனால் ஒருபோதும் அதற்கு எதுவித தடைகளும் விதிக்கப்பட்டதில்லை. ஏனெனில், ஒரே இனம் என்பதால் அந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

ஆகவே சிங்களத்தை தாய் மொழியாக் கொண்ட ஆயுத அமைப்பு ஒன்றுக்கு தடை செய்யப்படவில்லையெனின், அரசாங்கம் புலிகளை காரணம் காட்டி மாவீரர் நாளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப் பண்பு சுமூகமான ஓர் அரசியல் கலாசாரத்திற்கு இடமளிக்கும்.

வடக்குக் கிழக்குத் தமிழர்கள் கோருவது சுயநிர்ணய உரிமை. அந்த சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் மாவீரர் நாள் என்பது அவர்களுக்கு முக்கியமானது.

தமது தேச விடுதலைக்காக போராடி உயிர்நீத்த போராளிகள் மற்றும் போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களுக்காக தீபம் ஏந்தி அனுஷ்டிப்பதை தடுப்பது அரசியல் நாகரிகமல்ல.

இப் பின்னணியில் தங்களை சோசலிசவாதிகளாகக் காண்பித்துக் கொண்டு ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி இம்முறை இதற்குத் தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட பின்னணி என்று அதற்கு அர்த்தம் கற்பிக்க முடியாது.

மாவீரர் நாள் என்பதைவிடவும் போரில் உயிர்நீத்த பொதுமக்கள் என்றுதான் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கமும் தென் பகுதியில் உள்ள பல அரசியல் கட்சிகளும் வியாக்கியானம் செய்கின்றன.

முன்னைய ஆட்சியாளர்களும் மாவீரர் நாள் பற்றி அவ்வாறுதான் கற்பிதம் செய்திருந்தனர். ஆனால் முன்னாள் ஆயுதப் போராளிகள் என்பதால் தேசிய மக்கள் சக்திக்குரிய பொறுப்பு என்பது முன்னைய ஆட்சியாளர்களிடம் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்.

அந்த வேறுபாட்டை தமது அரசியல் – பொருளாதார திட்டங்களில் அநுர அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் விவகாரத்தில் ஜேவிபி அப்போது எடுத்திருந்த நிலைப்பாட்டோடுதான் செயற்பட்டு வருகின்றது என்பது பட்டவர்த்தனமாகும்.

ஏனெனில் ஜனாதிபதி அநுரவின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு அல்லது இலங்கைத்தீவு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்ற வாசகங்களுக்குப் பதிலாக ஒரு தேசம் என்பதும் சமத்துவம் என்ற சொல்லாடலும் அதிகம் வெளிப்பட்டன.

”சோசலிசம்” ”சமத்துவம்” என்பதற்குள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்காது. ”சமத்துவம்” என்பதன் உள்ளடக்கம் ஒரு இனத்துக்குள் இருக்க வேண்டிய விட்டுக் கொடுப்புகளையே குறிக்கும். மாறாக மற்றொரு தேசிய இனத்தின் சுயமரியாதையை உறுதிப்படுத்தும் சுயநிர்ணய உரிமைக்கு ”சோசலிசம்” ”சமத்துவம்” என்ற வாதம் பொருத்தமாக இருக்காது.

ஆகவே மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தடைகள் எதுவும் விதிக்கவில்லை என்பது மகிழ்ச்சியான தகவலாக இருந்தாலும், அந்த மாவீரர் நாள் என்பதன் சரியான உள்ளடக்கத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு வழி சமைப்பதே உறுதியான அரசியல் நிலைப்பாடாகும்.

அந்த நிலைப்பாட்டை முன்னெடுக்கும் வகையில் முதலில் அரசியல் – பொருளாதார பொறிமுறைக்குள் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும். அது நேர்மையான நல்லிணக்கத்துக்கான ஆரம்ப ஏற்பாடாகவும் அமைய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here