ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துணை இராணுவ வீரர்கள் நால்வர் மற்றும் இரண்டு பொலிஸார் உள்ளடங்குகின்றனர்.
மேலும் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி இராணுவ வீரர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின்படி பொதுமக்கள்,
நான்கு அல்லது அதற்கு அதிகமானோர், பொது இடத்தில் மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் கூடுவது குற்றமாக கருதப்படும். மேலும் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
ஆனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் எதனையும் பொருட்படுத்தாது சுமார் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் பேரை பொலிஸார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
அவர் தனது பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கானும்
அவரது மனைவியும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் பிணை வழங்குமாறு கோரி இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றில் இம்ரான் கான் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்ட ஒரு மணித்தியாலத்திலேயே ராவல்பிண்டி பொலிசார் அவரை கைது செய்தனர். இம்ரான் கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் பொலிஸ் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.