தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து களமாடி பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு வீரச்சாவடைந்த மறவர்களை – காவிய நாயகர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நேற்று தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும், இயற்கை இடர்பாடுகளைத் தாண்டியும் திரண்ட மக்கள், தமிழினத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொண்டு மழைநீருடன் கண்ணீர் கலக்க உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்தார்கள்.
வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் நேற்று மாலை 6.05 இற்கு மணியோசை எழுப்பப்பட்டு – 6.06 இற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு – 6.07 இற்குச் சுடரேற்றப்பட்டு மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர்.