வர்த்தகப் போர் ஆரம்பம்: தொடக்க புள்ளியை வைக்கிறார் ட்ரம்ப்

0
34
Article Top Ad

அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் உறுதிமொழிளை நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு தினத்தன்றே வைக்கவுள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி 20 ஆம் திகதி அவர் பதவியேற்க உள்ளார்.

உலக அரங்கில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. இவ்வாறிருக்க ஆட்சிபீடமேறியுள்ள ட்ரம்பின் நிதி உறுதிமொழிகள் உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அவை சில நாடுகளுக்கு சாதகமானதாகவும் இருக்கலாம் சில நாடுகளுக்கு பாதகமானதாகவும் இருக்கலாம். உலகம் முழுவதும் ட்ரம்பைச் சுற்றி பல்வேறு சவால்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது அதைப் பற்றிய விவாதங்கள் தலைத்தூக்கியுள்ளன.

இந்த நிலையில் “கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவிலான வரி விதிக்கப்படும்” என கடந்த திங்கட்கிழமை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதல் நடவடிக்கை இதுவென அவர் கூறியிருக்கிறார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 வீத வரி விதிப்பும் சீனா மீது 10 வீதமும் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்த ட்ரம்ப் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இறக்குமதி வரி நீக்கப்படும் என்றார்.

இந்நிலையில் அமெரிக்கா வர்த்தகப் போரைத் தூண்டினால் தாமும் பதிலடி கொடுப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பில் மெக்சிகோ ஜனாதிபதியுடன் தான் உரையாடியதாகவும் தெரிவித்த ட்ரம்ப், ஷீன்பாமும் மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார் என அறிவித்திருந்தார்.

ட்ரம்புடனான கலந்துரையாடலை ஷீன்பாம் உறுதிப்படுத்திய போதிலும், இடம்பெயர்வு பிரச்சினைகளில் மெக்சிகோவின் நிலை பற்றியே நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எங்கள் எல்லையை அடையவில்லை என்று நான் அவரிடம் கூறினேன். ஏனென்றால் அவர்களை மெக்சிகோ உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எங்கள் இறையாண்மையின் கட்டமைப்பிற்குள், பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், போதை பொருள் நுகர்வை தடுக்க நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் பற்றியுமே கலந்துரையாடினோம்” என்றார்.

“மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்து இருக்கின்றன. எனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பின் அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும் திறன் குறைவாகவே உள்ளது” என ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட் துணைத் தலைவரும் முன்னாள் அமெரிக்க வர்த்தக அதிகாரியுமான வெண்டி கட்லர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி காலத்தில் சீனாவை உலகளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டிய ட்ரம்ப், சீன இறக்குமதிகளுக்கு 60 வீத வரி விதிக்கப்படும் என பிரசார மேடைகளில் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அமெரிக்க -சீன உறவுகளின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்