இனவாதம் மீண்டும் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது: வரலாற்று சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம் – பிரதமர் அழைப்பு

0
4
Article Top Ad

அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது என்பதுடன், அதனை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் விசேட உரையை நிகழ்த்திய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இனவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவே பொதுத் தேர்தலில் மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளனர். அரசியல் காரணிகளுக்காக மக்களை பிளவுபடுத்தி, பிரித்தாள்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெளிவாக கூறியுள்ளனர். அதனால் எமது அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துக்கு இடமளிக்காது.

தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் மீண்டும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல இனவாதத்தை தூண்டி, இனவாதக் கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்த முற்படுகின்றன. ஆனால், இனவாதம் மீண்டும் தலைத்தூக்க அரசாங்கம் இடமளிக்க போவதில்லை. இத்தகைய செயல்பாட்டை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நாட்டின் அனைத்து மக்களை ஒன்றிணைக்க அனத்து தரப்பு மக்களிடமிருந்தும் பிரதிநிதித்துவம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் நழுவவிட மாட்டோம்.

இந்த மக்கள் ஆணையை நாம் முறையாக புரிந்துகொண்டு மக்களை ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களாக இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல தயாராக உள்ளோம்.

நாட்டின் அனைத்து பிரஜைகளும் இந்த நாடாளுமன்றத்தையும் எம்மையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தம்மை பிரதிநிதித்துவத்தும் செய்யும் பிரதிநிதிகள் தமக்காக செயல்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் அந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முழுமையாக நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இது கைவிட முடியாத பணியாகும்.

எதிர்க்கட்சியிலும் இனவாதத்தை புறக்கணிக்கும் எதிர்க்கும் பலர் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மக்கள் எம்மிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால் வரலாற்றின் பாடங்களை உணர்ந்து சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம். அதனைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here