ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய பயணக்கு முன்பு இடம்பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பயணமாக இராஜதந்திர மட்டத்தில் அவதானிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
என்றாலும், ஜனாதிபதி தமது முதாலாவது வெளிநாட்ட பயணத்தை மத்திய கிழக்கு நாடொன்றுக்கு மேற்கொள்ள தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டிருந்தாக தெரியவருகிறது.
பாரம்பரியத்தை பின்பற்ற விரும்பும் அநுர
இதற்கு காரணம் மூன்று மத்திய கிழக்கு நாடுகளிடம் சலுகை விலையில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவில் உள்ள இலங்கை பேராசிரியர் ஒருவர் ஊடாக பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த நாடுகளுடனான இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தமது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள அநுரகுமார திசாநாயக்க ஆரம்பத்தில் திட்டமிட்டுள்ளார்.
என்றாலும், இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பின்பற்றிய பாரம்பரியம் காரணமாக அதிலிருந்து பின்வாங்கிய அநுரகுமார திசாநாயக்க, முன்னைய அரச தலைவர்கள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணத்தின் பாரம்பரியத்தை பின்பற்ற திட்டமிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்திய பயணம் மிகவும் தீர்க்கமான ஒன்றாகும். இந்த பயணத்தை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதே இதற்குக் காரணம்.
இராஜதந்திரிகள் உன்னிப்பாக அவதானம்
இந்த பயணத்தில் ஜனாதிபதி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுடன் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களாகும். குறிப்பாக ரணிலின் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு, மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையத்தை அமைக்க அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடு, கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் பணியை அதானி குழுமத்துக்கு வழங்கியமை, இந்தியா – இலங்கையில் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு உடன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர தமது பயணத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்திருந்தமையால் இந்தியப் பயணம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் இலங்கையில் உள்ள இராஜதந்திரிகளும் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு
இந்திய ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி இவ்வாறு கருத்துகளை தெரிவித்திருந்தமைக்கான காரணம் அவர் இந்திய பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், இந்தியா தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிகாட்ட வேண்டிய தேவை இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், அவரது பயணத்துக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்தில் இந்திய – இலங்கை உறவு தொடர்பிலும் அநுர அரசாங்கம் தொடர்பிலும் சில கருத்துகளையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இராஜதந்திர ரீதியாக தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் இந்த அவசர பயணம் அமைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை இந்தியா பொறுத்துக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக நீண்டகாலமாக இந்தியா செயல்பட்டு வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் இராஜதந்திர நகர்வு
சமகால அரசாங்கம் சீனாவுடன் சில நெருக்கமான உறவை பேணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துகளை பகிர்ந்துவரும் பின்புலத்தில் இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங், அநுர அரசாங்கத்துடன் எம்மால் நெருக்கமாக பணியாற்ற முடியும் என்ற கருத்தை அடிக்கடி கூறிவருவதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சீனாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் சில கருத்துகள் இந்தியாவுடனான நெருங்கிய உறவுக்கு எதிர்காலத்தில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என ரணில் விக்ரமசிங்க தரப்பு கருதுகிறது. அதன் காரணமாகவே அநுரவின் இந்திய பயணத்துக்கு முன்னர் ரணில் இந்தியா சென்றுள்ளார். இந்திய அரசுக்கு மறைமுகமாக சில செய்திகளை சொல்லும் நோக்கில் அவரது பயணம் அமைந்திருக்கிறது.
சீனாவுடன் நெருங்கி பணியாற்ற விரும்பும் அநுரவுக்கு இந்திய பயணம் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடுகள் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
சாதமாக்கும் முயற்சியில் ரணில்
இதற்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தெரிவித்துவரும் கருத்துகளும் இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் முக்கிய ஆயுதமாக 1987ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அரசியலமைப்பிலிருந்து நீக்கி தமது அரசியல் செல்வாக்கை இழக்க ஒருபோதும் இந்தியா விரும்பாது. அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு, இந்தியா தொடர்பான சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு இதற்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னாள் ஆட்சியாளர்களின் நகர்வுகள் என்பன அநுரவின் இந்திய பயணத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும்.
சமகால அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பாடான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டால் அதனை தமக்கு சாதமாக்கும் முயற்சியில் ரணில் தரப்பு ஈடுபடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுப்ரமணியம் நிஷாந்தன்