2025 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை இன்று வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இடைக்கால கணக்கறிக்கை மீது இன்றும் நாளையும் நாடாளுமன்றில் விவாதம் நடைபெறுவதுடன், நாளை மாலை இதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2600 பில்லியன் ரூபா முதல் நான்கு மாதங்களுக்கு இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரச வருவாய் 1600 பில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வட்டிச் செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதன செலவுக்காக 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்றாலும், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதால் காலத்தாமதங்கள் ஏற்பட்டால் அடிப்படை கடன் பெறும் வரம்மை 4000 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறையாண்மை கடன் பத்திரங்கைளை வெளியிடவும் அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.