இந்தியாவில் நடந்து வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) வியாழன் (05) அன்று சிக்கிமுக்கு எதிராக பரோடா (Baroda) அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை குவித்தது.
இதனால், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டம் குவித்த அணி என்ற சாதனையை பரோடா படைத்தது.
சிக்கிமுக்கு எதிராக இந்தூரில் உள்ள எமரால்டு உயர்நிலைப் பாடசாலை மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பரோடா அணியின் பானு பனியா 51 பந்தில் 15 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 134 ஓட்டங்களை எடுத்தார்.
கடந்த மாதம் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்று குழு பி போட்டியில் சிம்பாப்வே டி20 போட்டியில் காம்பியாவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தது.
இதனால், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த அணி என்ற புதிய சாதனையை சிம்பாப்வே அப்போது படைத்தது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் மூன்று விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்த சாதனைகளை தற்சமயம் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பரோடா அணி முறியடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் பரோடா ஒரு இன்னிங்ஸில் 37 சிக்ஸர்களை அடித்தும் சாதனை படைத்தது.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் மொத்தம் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பதிவு செய்த முதல் அணியாக பரோடா பதிவாகியுள்ளது.