இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு அதிகளவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம் போன்றவை இதனால் முடக்கப்பட்டு வருகின்றன.
எனினும், கருத்து சுதந்திரம் எனக்கூறிக் கொண்டு தவறான விடயங்களை முன்வைப்பவர்களும் இல்லாமலில்லை. அவை ஒரு புறம் இருக்க, தற்போது நாட்டில் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
அதற்கான காரணம் அண்மையில் இடம்பெற்ற மாவீரர் நாள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களையும், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பல மனித உரிமை அமைப்புகளும் இதற்கு எதிராக குரல் எழுப்பி வந்தாலும் எந்தவொரு அரசாங்கமும் இதனை எதிர்க்கவில்லை. 1979ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதனைவிட பாரதூரமான ஒரு சட்டத்தை கொண்டு வர நல்லாட்சி அரசாங்கம் முயற்சி செய்த போதிலும் கூட எதிர்க்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு காரணமாக அது வெறும் உத்தேச சட்டமாகவே முன்வைக்கப்பட்டது.
எனினுமட இந்த சட்டமூலத்தினால் நாட்டின் பல்லின மக்களும் பாதிக்கப்பட்டு வந்தாலும் அதிகளவில் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இன்னுமும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல முஸ்லிம்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தையடுத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல சிங்கள மக்களும் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேசத்தில் மட்டுமன்றி உள்நாட்டிலும் அதிக விமர்சனங்களுக்கு உள்ளான சட்டமாக பயங்கரவாத சட்டத்தை அடையாளப்படுத்தலாம்.
எனினும், பயங்கரவாதத்தில் ஈடுபடும் சந்தேக நபர்களைத் தவிர, அரசியல் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும் இனவாத அல்லது மத உணர்வுகளைஈ வெளிப்பாடுகளை ஒடுக்குவதற்கும் இலங்கையில் ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இதைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதுதான் நிதர்சனமும் கூட.
பல அரசியல் தலைமைகளால் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலங்களுள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை உள்ளடக்க முடியும்.
தற்போது நாட்டை ஆட்சி செய்து வரும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒரு காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த அரசியல் கட்சியாக மிகவும் பிரபலமடைந்திருந்தது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் கூட ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர் எனினும், தற்போது வரையில் குறித்த சட்டத்தின் கீழ் கைதுகளே இடம்பெற்றுள்ளன.
ஆகவே, அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக வழங்கியிருந்த வாக்குறுதியிலிருந்து நீங்க முயற்சித்தாலும் அதிலிருந்து நீங்க முடியாது.
பல வாக்குறுதிகளை வழங்கி பெரும்பான்மை மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தால் அவர்களின் வாக்குறுதிகளை போலியாக்க முடியாது.
காரணம், மக்கள் அந்த வாக்குறுதிகளுக்காகவும், கொள்கைகளுக்காகவுமே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிபீடமேற்றினர்.
எனினும், நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க பல சட்டங்கள் காணப்படுவதால் அதற்கு புதிதாக ஒரு சட்டம் அவசியம் இல்லை என்பதே சட்ட ஆலோசகர்களின் வாக்குவாதமாகவும் காணப்பட்டு வருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள், அரசியல் பழிவாங்கல்கலுக்காக பழி தீர்க்கப்பட்டனர்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
“அரசாங்கத்தை விமர்சித்ததற்காக நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. எங்களின் குறைகளை சுட்டிக் காட்டுங்கள். எங்களை விமர்சியுங்கள். அந்த சுதந்திரத்தில் தலையிட மாட்டோம், ஆனால் இனவாதத்தை தூண்டுவதை அனுமதிக்க முடியாது,”எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டமானது முற்றிலும் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.