இலங்கையின் வடபகுதியை மையமாகக் கொண்ட ‘ஆவா குழு’ எனப்படும் குற்றக் கும்பலின் தலைவன் என நம்பப்படும் இலங்கை பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்னா நல்லலிங்கம், டொரான்டோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள சந்தேகநபர் பிரான்சுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக கனடா பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
2022 செப்டம்பரில் பிரான்சில் அபிராமன் பாலகிருஷ்ணன் என்பரை கொலை செய்தமை மற்றும் மற்றொரு நபரை கொலை செய்ய முயன்றது தொடர்பாக பிரசன்னாவை நாடு கடத்தவுள்ளதாக கனடாவின் நீதித்துறை உறுதி செய்தது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் செயல்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலான ஆவா எனப்படும் குற்றக் குழுவின் தலைவர் என்று நம்பப்படுகிறது.
ஆவா, LC Boysஇன் போட்டியாளர்களாக அறியப்பட்ட ஒரு குழுவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்கல்கள் கூறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் ஊடக அறிக்கையின்படி, பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னேவ் என்ற கம்யூனின் கட்டுப்பாட்டில் இரு குழுக்களும் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி லா கோர்னியூவில் வாகனத்தில் இருந்த இருவரை நல்லலிங்கம் மற்றும் ஐந்து கூட்டாளிகள் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டாவது நபர் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பாலகிருஷ்ணன் உயிரிழந்ததுடன், இரண்டாவது நபர் உயிர் பிழைத்ததாக பிரான்ஸ் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத் தாக்கல்களின்படி, அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், இதனையடுத்து சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அந்த நேரத்தில் பிரசன்னா ஏற்கனவே பிரான்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒருவராவார். 2019 இல் “வன்முறைச் செயல்களுக்காக” அவருக்கு ஆறு மாத இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகக் நீதிமன்ற ஆவணங்கள்காட்டுகின்றன.
பிரசன்னா டிசம்பர் 2022 இல் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள் நுழைந்தார்.
பதிவுகளின்படி, கியூபெக்கில் உள்ள ரோக்ஸ்ஹாம் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் ஒரு மோசடி பெயரை பதிவு செய்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் நுழைந்துள்ளார். எவ்வாறாயினும், அவர் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைந்தார் என்பது தெரியவில்லை.
இந்த ஆண்டு மே மாதம் வரை, பிரசன்னா அகதிகள் அனுமதி விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், டொராண்டோ பொலிஸ் சேவையின் உதவியுடன் கனடா எல்லைச் சேவை முகவரால் கைது செய்யப்பட்டார்.
அவரைக் காவலில் எடுத்ததும், அதிகாரிகள் சர்வதேச பொலிஸாரின் கோப்பில் வழங்கப்பட்ட கைரேகைகளை சோதனை செய்த போது அது பொருந்தியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவெர் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார். அவர் மீதான விசாரணை 2025 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.