சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான கலாநிதி பட்டத்தை காட்டுவது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது.
இந்நிலையில், அசோக ரன்வல என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை அவதூறு செய்துள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜப்பானிய பல்கலைக்கழகம் உறுதிப்படுத்திய இந்த தகவல் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்)