ஈழத் தமிழர்களுக்கான நீதியும் இலங்கையின் அரசியல் போக்கும்!

0
8
Article Top Ad

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கைகளில் கூறப்பட்டுமிருந்தது.

இலங்கை 1972 இல் குடியரசாகிய பின்னர் 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது யாப்பில் இலங்கை நீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் மாற்றியமைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நீதித்துறையின் செயற்பாடுகள் சுயாதீனமாக இயங்கக்கூடிய அளவுக்கு அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. நீதித்துறை மாத்திரமல்ல தேர்தல் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட முக்கியமான அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கக்கூடிய முறையில் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகித்த 2015 ஆம் ஆண்டுதான் இத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் 18 ஆவது திருத்தம் அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே 2015இல் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

அப்போது மிகவும் ஜனநாயக மொழியில் வாதிட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க 2022 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டமை அரசியல் நாகரிகமல்ல என்று அப்போது பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் விடயத்தில் ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புச் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

இந்த நிலையில் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் பேரவையில் முன்வைக்கப்பட்ட ரணிலின் பரிந்துரையை நிராகரிப்பதற்கு அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் சரியானது என்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றம் சென்ற வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத் தீர்ப்பு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரத்தை ரணில் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விமர்சித்திருந்த ரணில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிபதிப் பதவியில் இருந்து விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

ஆனால், மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆதரவுடன் அவர் ஜனாதிபதியாகினார் என்பதும் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப் பின்னணியில்தான் ரணிலின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்ற என்பதும் புரியாத புதிரல்ல.

ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இலங்கை நீதித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மகிந்த ராஜபக்ச என்பதை உலகம் அறியும். குறிப்பாக திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அப்போது பிரதம நீதியரசராக பதவி வகித்திருந்த சிறாணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து விலக்கியவர் என்பதை மக்கள் அறிவர்.

அதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவிநெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று சிறாணி பண்டாரநாயக்கா தீர்ப்பளித்தார். இத் தீர்ப்பு மகிந்தவுக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் சிறாணிக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கையொப்பமிட்ட குற்றச்சாட்டுக்கள் (Impeachment) தொடுக்கப்பட்டன.

இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு டிசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மற்றும் சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தன.

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால், எந்த ஒரு விமர்சனங்களையும் கண்டனங்களையும் மகிந்த கண்டுகொள்ளவில்லை. மாறாக சிறாணி பண்டாரநாயக்காவின் இல்லத்துக்கு முன்பாக அரச ஆதரவாளர்களும், குண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குத் தூண்டினார்.

மகிந்தவின் இச் செயற்பாடுகளை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் கடுமையாகக் கண்டித்ததுடன் சர்வதேச நாடுகளிடமும் முறையிட்டிருந்தார். இந்த அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் ரணில் வகுத்த வியூகங்களை ஏற்று அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன கட்சியின் இருந்து வெளியேறி ரணிலுடன் கூட்டுச் சேர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ரணில் பிரதமரானார். சிறாணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராகப் பதவியேற்றார். 2015இல் 19 ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

ஆனால் 2022 இல் அதிஸ்டவசமாக ஜனாதிபதியான ரணில் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டது மாத்திரமல்ல 19 ஆவது திருத்தத்துக்கு மாறாக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களையும் அவர் மீறியிருக்கிறார் என்பது வேடிக்கை மாத்திரமல்ல அவமானமும் கூட. ஆகவே பாரம்பரியக் கட்சிகளை ஓரம்கட்டி ஆட்சிக்கு வந்துள்ள அநுரவும் இச் செயற்பாடுகளுக்கு உள்ளாகிவிடக்கூடாது.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை சார்ந்த விவகாரங்களில் நீதித்துறை இவ்வாறுதான் செயற்பட்டிருந்தது. ஆகவே மாற்றம் என்று மார் தட்டும் அநுர இவற்றை கவனத்தில் எடுப்பாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here