ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின.
சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.
“இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.